குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
x

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

உப்பிலியபுரம்:

சாலை மறியல்

உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சியில் 8-வது வார்டில் உள்ள குரும்பர் தெருவிற்கு தங்கநகர் பகுதியில் இருந்து வரும் குடிநீர் நிறுத்தப்பட்டு, ஆழ்துளை கிணற்றில் இருந்து பெறப்படும் தண்ணீர் வினியோகிக்கப்படுவதாக பொதுமக்களிடையே புகார் எழுந்தது. மேலும் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறி நேற்று அப்பகுதியில் பெண்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.இது பற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் குணசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஊராட்சி தலைவர் மனோகரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது குடிநீர் வினியோகம் சீரமைக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். மறியலால் பச்சபெருமாள்பட்டி- புளியஞ்சோலை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருட முயன்றவர் கைது

*திருச்சி எடத்தெரு பிள்ளைமாநகரை சேர்ந்த யோகராஜ்(வயது 29) வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

*திருச்சி புத்தூர் நான்குரோடு பகுதியில் ஒலிபெருக்கி நிலையம் நடத்தி வரும் சக்திவேல்(45), நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு சென்றார். அப்போது அவரது கடையில் புகுந்து திருட முயன்றதாக பாண்டமங்கலத்தை சேர்ந்த மன்சூர்அலிகானை(22) உறையூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய குமரேசனை தேடி வருகின்றனர்.

மது குடித்து தூங்கியவர் சாவு

*திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரை சேர்ந்தவர் முகமதுஈசாக்(31). அரிசிக்கடை நடத்தி வருகிறார். அங்கு மதுபோதையில் வந்த 4 பேர் அரிசி மூட்டைகளை கீழே தள்ளி கடையில் இருந்த கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதேபகுதியை சேர்ந்த ரமேஷ்(29), ரெயில்நகரை சேர்ந்த பிரபாகரன்(30) ஆகியோரை கைது செய்தனர்.

*திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் மேலத்தெருவை சேர்ந்த சந்திரசேகர் (42), நேற்று முன்தினம் சோழமாநகரை சேர்ந்த அவரது நண்பர் அருள்நேசனுடன்(45) திருவெறும்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள மொட்டை மாடியில் மது அருந்திவிட்டு படுத்து தூங்கியுள்ளார். பின்னர் சந்திரசேகர் மழையில் நனைந்து இறந்து கிடந்தார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது

*திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த பிரேம்குமாரின் மகன் விக்னேஷ்(22). தனியார் நிதி நிறுவன ஊழியரான இவரை தாக்கி செல்போனை பறித்தது தொடர்பாக பாலக்கரையை சேர்ந்த வின்சென்ட் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அசோக்குமாரை தேடி வருகின்றனர்.

*பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(25). பெயிண்டரான இவர், 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இது குறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்தனர். மேலும் அவருடைய நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் தற்கொலை

*தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் தைலம்பாளையம் காலனியை சேர்ந்தவர் கருமலை(78). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து மரத்தில் தூக்குப்போட்டு தொங்கிய அவரை சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*திருச்சி உள் அரியமங்கலம் கொத்தளத்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை அல்லித்துறை மதுபானக்கடை அருகே அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*மணப்பாறையை சேர்ந்தவர் மாபு பாஷா(39). இவர் ஒரு விபத்து வழக்கு தொடர்பாக மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்திருந்த நிலையில், திடீரென அங்கிருந்தவர்களிடம் பிரச்சினை செய்துள்ளார். அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்ற எழுத்தர் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story