இலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாசாவை விட கோத்தபய ராஜபக்சே 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை


இலங்கை அதிபர் தேர்தல்:  சஜித் பிரேமதாசாவை விட கோத்தபய ராஜபக்சே 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை
x
தினத்தந்தி 17 Nov 2019 4:52 AM GMT (Updated: 17 Nov 2019 4:52 AM GMT)

இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவை விட கோத்தபய ராஜபக்சே 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

கொழும்பு,

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.  இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். எனினும் இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பின்னர் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் கொண்டு செல்லப்பட்டு, 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் அதிகாலை 4.30 மணியளவில் வெளியான முடிவின்படி முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றார்.

அவர் 9 மாவட்டங்களில் தபால் வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.  மற்றொரு வேட்பாளரான சஜித் பிரேமதாசா 3 மாவட்டங்களிலேயே முன்னிலையில் உள்ளார்.

இதேபோன்று நாட்டின் தெற்கு பிரிவில் பதிவான வாக்குகளின்படி, ராஜபக்சேவுக்கு 65 சதவீத வாக்குகளும், பிரேமதாசாவுக்கு 28 சதவீத வாக்குகளும் கிடைத்திருந்தன.  சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ராஜபக்சேவும், தமிழ் சமூகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பிரேமதாசாவும் முன்னிலையில் இருந்தனர்.

தொடர்ந்து நடந்த வாக்கு பதிவு எண்ணிக்கை முடிவில் ராஜபக்சே 52.87 சதவீத வாக்குகளும், பிரேமதாசா 39.67 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.  இடதுசாரி வேட்பாளர் அனுரா குமர திசநாயகே 4.69 சதவீத வாக்குகளுடன் 3வது இடம் பெற்றார்.

இந்நிலையில், காலை 8.30 மணியளவிலான வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின்படி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் பிரேமதாசாவுக்கு 10 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.

முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளரான கோத்தபய ராஜபக்சேவுக்கு 9.1 லட்சம் வாக்குகளே கிடைத்தன.  இதனால் அவரை விட சஜித் பிரேமதாசா 90 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றார்.

இதேபோன்று தமிழர் மற்றும் முன்னாள் எம்.பி.யான சிவாஜிலிங்கம் 8,566 வாக்குகள் பெற்றார்.  தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது.  இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் காலை 10 மணியளவில் வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவின்படி சஜித் பிரேமதாசாவை விட கோத்தபய ராஜபக்சே 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

அவர் சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளார்.  இதுவரை கோத்தபய ராஜபக்சே 20 லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகளும், சஜித் பிரேமதாசா 19 லட்ச வாக்குகளும் பெற்றிருக்கின்றனர்.  இதனால் கோத்தபய ராஜபக்சே கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Next Story