இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி அமோக வெற்றி


இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி அமோக வெற்றி
x
தினத்தந்தி 13 Dec 2019 12:28 PM GMT (Updated: 13 Dec 2019 8:48 PM GMT)

ஜனவரி மாதம் 31-ல் பிரெக்சிட்டை நிறைவேற்றுவோம் இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி அமோக வெற்றி பெற்றது.

லண்டன்,

650 உறுப்பினர்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை முன்னிலைப்படுத்தி இந்த தேர்தல் நடத்தப்பட்டது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று காலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 326 இடங்கள் தேவைப்படும் நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி 364 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருக்கிறது.

1987-ம் ஆண்டுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இதன் மூலம் போரிஸ் ஜான்சன் வெற்றிகரமாக தனது ஆட்சியை தக்கவைத்து மீண்டும் பிரதமராகிறார்.

அதே சமயம் இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும் பின்னடவை சந்தித்து இருக்கிறது. அக்கட்சிக்கு 203 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. 1935-ம் ஆண்டிற்கு பிறகு அக்கட்சி சந்திக்கும் மிகமோசமான தோல்வியாக இது அமைந்துள்ளது.

எனவே அடுத்த பொதுத்தேர்தலில் தனது கட்சியை வழிநடத்த போவதில்லை என தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பைன் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சியின் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் ‘பிரெக்ஸிட்’ பிரச்சினையால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையே தேர்தலில் தனது கட்சியை அமோக வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சான் ஜனவரி 31-ந்தேதிக்குள் “பிரெக்ஸிட்”டை நிறைவேற்றுவேன் என சூளுரைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு லண்டனில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசிய தாவது:-

இது நம் நாட்டுக்கு ஒரு புதிய விடியல். வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கொடுத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக கன்சர்வேட்டிவ் கட்சியை முதல்முறையாக ஆதரித்துள்ள தொழிலாளர் கட்சியினருக்கு கூடுதல் நன்றி. மக்களாட்சியை வழிநடத்தவும், என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்றவும் இரவும், பகலும் உழைப்பேன்.

இந்த தேர்தல் முடிவுகள் ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக நாடாளுமன்றத்தில் நீடித்து வந்த தடையை அடித்து நொறுக்கி, மோசமான அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜனவரி 31-ந்தேதிக்குள் ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது போரிஸ் ஜான்சனுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக தெரிகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story