கொரோனா பாதிப்பு; மரணத்தில் தப்பி பிழைத்த நபருக்கு மருத்துவ பில் தந்த பேரதிர்ச்சி


கொரோனா பாதிப்பு; மரணத்தில் தப்பி பிழைத்த நபருக்கு மருத்துவ பில் தந்த பேரதிர்ச்சி
x
தினத்தந்தி 14 Jun 2020 4:29 AM GMT (Updated: 14 Jun 2020 4:29 AM GMT)

அமெரிக்காவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று மரணத்தில் இருந்து உயிர் தப்பிய முதியவருக்கு வந்த மருத்துவ பில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த மார்ச் 4ந்தேதி கொரோனா பாதிப்பிற்காக மைக்கேல் புளோர் (வயது 70) என்ற முதியவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.  தொடர்ந்து 62 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, சிகிச்சையின் இடையே ஒரு காலகட்டத்தில் அவரை உயிர் பிழைக்க வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.  அவரை மரணம் நெருங்கியது.  இதனால், செவிலியர்கள் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் குட்பை சொல்வதற்காக போனை ஆனில் வைத்தனர்.

ஆனால், அதிர்ஷ்டவச முறையில் அவர் உயிர் பிழைத்து விட்டார்.  பின்னர் சிகிச்சை முடிந்த கடந்த மே 5ந்தேதி வீடு திரும்பினார்.  அவருக்கு அளித்த சிகிச்சை பலன் தந்த மகிழ்ச்சியில் செவிலியர்கள் உற்சாகமுடன் வழியனுப்பினர்.  ஆனால், புளோருக்கு வந்த மருத்துவ பில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதில் இந்திய மதிப்பில் ரூ.8.3 கோடிக்கு கட்டண செலவு எழுதப்பட்டு இருந்தது.  தீவிர சிகிச்சை அறைக்கு நாள் ஒன்றுக்கான செலவு, வென்டிலேட்டர் கட்டணம், உயிருக்கு அச்சுறுத்தலான 2 நாட்களுக்கு அளித்த உயர் சிகிச்சை என சேர்த்து இந்த கட்டண தொகை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

முதியோருக்கான அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் இருந்த புளோர் தனது பணத்தினை செலவு செய்ய வேண்டிய தேவை இல்லாமல் போனது.  ஆனால் அவர் கூறும்பொழுது, ஒரு நாட்டில், சுகாதார நலம் என்பது உலகில் அதிக விலையுயர்ந்த ஒன்றாக இருக்கும்பொழுது, அதனை சமூகமயமாக்குவதில் சர்ச்சை தொடர்வது, வரி செலுத்தும் மக்களுக்கு அதிக கட்டண சுமையை ஏற்படுத்தும்.  பெருமளவிலான மக்கள் பாதிக்கப்படுவர்.  இதனால் எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என கூறியுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் ரூ.75 ஆயிரத்து 957 கோடி அளவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யும் பெரிய அளவிலான திட்டம் ஒன்றை செயல்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

Next Story