குறைந்தபட்ச ஓய்வூதியம் 6,000 ரூபாயாக உயர்த்தப்படுமா? - இன்று ஆலோசனை


குறைந்தபட்ச ஓய்வூதியம் 6,000 ரூபாயாக உயர்த்தப்படுமா? - இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 20 Nov 2021 8:00 AM GMT (Updated: 20 Nov 2021 8:00 AM GMT)

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின்(இ.பி.எப்) ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின்(இ.பி.எப்) மத்திய உறுப்பினர்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று  229வது முறையாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய விஷயமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை ஆறாயிரம் ரூபாயாக  உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தக சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன. அந்த கோரிக்கையின்படி குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு எடுக்கப்படும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனினும், குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை மூவாயிரம் ரூபாயாக மட்டுமே உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

தொழிலாளர்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினரான பிஜு ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி பார்த்ருஹாரி மஹ்தாப் கூறுகையில்,

“2014ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய தொகையின் அடிப்படையிலேயே இன்று வரை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மிகவும் குறைந்த அளவில் உள்ளது. எனவே, ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

2021-22ம் நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. 

2020-21ம் நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக நிர்ணயித்து கடந்த கால கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே, மத்திய நிதி அமைச்சகம் நடப்பு நிதியாண்டின் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக நிர்ணயித்து அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story