இத்தாலியில் பெர்லின் லாரி தாக்குதல் பயங்கரவாதி சுட்டுக்கொலை

இத்தாலியில் பெர்லின் லாரி தாக்குதல் பயங்கரவாதி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 23 Dec 2016 9:30 PM GMT (Updated: 23 Dec 2016 8:15 PM GMT)

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் 19-ந் தேதி இரவு, கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் நெரிசல் மிகுந்த நேரத்தில், லாரியை தாறுமாறாக ஓட்டிச்சென்று தாக்குதல் நடத்தி ஒரு பயங்கரவாதி 12 பேரை கொன்று குவித்தார்.

ரோம்,

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் 19-ந் தேதி இரவு, கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் நெரிசல் மிகுந்த நேரத்தில், லாரியை தாறுமாறாக ஓட்டிச்சென்று தாக்குதல் நடத்தி ஒரு பயங்கரவாதி 12 பேரை கொன்று குவித்தார்.

அவரை போலீசார் பிடித்து விசாரித்து, உரிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுவித்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆனால் அந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

அதைத் தொடர்ந்து சுதாரித்த ஜெர்மனி போலீசார், துனிசியாவை சேர்ந்த அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் அனிஸ் அம்ரி என்னும் அவர் இத்தாலிக்கு தப்பி, அங்கு மிலன் நகரில் நேற்று அதிகாலை 3 மணிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போலீசார் வழக்கமான வாகன சோதனைக்காக அவரது காரை நிறுத்தினர். அப்போது அவர் போலீசாரை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டார். உடனே போலீசார் அவரை சுட்டுக்கொன்றனர்.

அதன்பின்னர்தான் அவர் பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் லாரி தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அனிஸ் அம்ரி என தெரிய வந்தது.

இவர் 2011-ம் ஆண்டு துனிசியாவில் இருந்து இத்தாலி வந்ததாகவும், அங்கு ஒரு அகதிகள் முகாமில் தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டதும், 2015-ம் ஆண்டு தண்டனை முடிந்த நிலையில் அவர் ஜெர்மனிக்கு சென்றதும், தெரிய வந்துள்ளது. 

Next Story