பாகிஸ்தானில் இருந்து வெளியேற ‘ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்பிடம் நான் உதவி கேட்கவில்லை’ முஷரப் ‘திடீர்’ பல்டி


பாகிஸ்தானில் இருந்து வெளியேற ‘ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்பிடம் நான் உதவி கேட்கவில்லை’ முஷரப் ‘திடீர்’ பல்டி
x
தினத்தந்தி 28 Dec 2016 12:15 AM GMT (Updated: 27 Dec 2016 7:00 PM GMT)

‘‘பாகிஸ்தானில் இருந்து வெளியேறுவது தொடர்பாக நான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்பிடம் எந்த உதவியும் கேட்கவில்லை’’ என முஷரப் கூறி உள்ளார். தடை நீக்கம் பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, நெருக்கடி நிலை

இஸ்லாமாபாத்,

‘‘பாகிஸ்தானில் இருந்து வெளியேறுவது தொடர்பாக நான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்பிடம் எந்த உதவியும் கேட்கவில்லை’’ என முஷரப் கூறி உள்ளார்.

தடை நீக்கம்

பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கு, தேசத்துரோக வழக்கு என பல கிரிமினல் வழக்குகள், கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளின் காரணமாக அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட்டு ஏற்று, அவருக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து அவரது பெயர், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம், முஷரப் துபாய் சென்றார்.

‘ராணுவ தளபதி உதவினார்’

இந்த நிலையில் முஷரப் கடந்த வாரம் ‘துன்யா நியூஸ்’ என்ற டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த ரஹீல் ஷெரீப், எனக்கு உதவி செய்தார். மிகத் தெளிவாக கூறுகிறேன். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நான் அவருக்கு முன்பாக ராணுவ தளபதியாக இருந்திருக்கிறேன். நான் வெளியேற அவர் உதவினார். ஏனென்றால் என் மீதான வழக்குகளில் அரசியல் புகுந்து விட்டது’’ என கூறியதாக தகவல்கள் வெளியாகின.

அது மட்டுமின்றி, ‘‘அவர் எந்த வகையில் உதவினார்?’’ என்று எழுப்பிய கேள்விக்கு முஷரப், ‘‘கோர்ட்டுகளில் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தினார்’’ என கூறியதாகவும் தகவல்கள் வந்தன.

திடீர் பல்டி

இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் மற்றொரு டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் தனது முந்தைய பேட்டி கருத்தில் இருந்து திடீரென பல்டி அடித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘நாட்டை விட்டு நான் வெளியேறுவது தொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை. நானும் யாரையும் அணுகவில்லை. முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் என்னுடன் எதையும் விவாதிக்கவில்லை. நானும் அவரிடம் உதவி கேட்டு எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை. ஊடகங்கள்தான் தவறாக சித்தரித்து விட்டன’’ என்று தெரிவித்தார்.

ராணுவத்தின் தலையீடு

உள்நாட்டு அரசியலில் ராணுவத்தின் தலையீடு பற்றி முஷரப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘‘பாகிஸ்தானில் எல்லா அமைப்புகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயல்படுகின்றன. நான் 40 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் பணியாற்றி இருக்கிறேன். எனக்கும், ராணுவத்துக்கும் இடையே ஒரு நெருங்கிய பிணைப்பு இருக்கிறது. அது எப்போதும் தொடரும்’’ என பதில் அளித்தார்.

‘‘முஷரப் 4 முதல் 6 வாரங்களில் நாடு திரும்பி, தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்ள உறுதி பூண்டுள்ளார் என்று கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் உள்துறை மந்திரி நிசார் அலி கான் கூறினாரே?’’ என்று முஷரப்பிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு முஷரப், ‘‘நான் புறப்பட்டு சென்றபோது, அப்படி காலவரையறை எதையும், குறிப்பிட்டு அதற்குள் நான் திரும்புமாறு எதுவும் கூறப்படவில்லை. கோர்ட்டு உத்தரவிலும் அப்படி எதுவும் கூறப்படவில்லை’’ என பதில் அளித்தார்.


Next Story