ஒபாமா அதிரடி; ரஷியா ஹேக்கிங் விவகாரம் உளவுத்துறை அதிகாரிகளை டொனால்டு டிரம்ப் சந்திக்கிறார்


ஒபாமா அதிரடி; ரஷியா ஹேக்கிங் விவகாரம் உளவுத்துறை அதிகாரிகளை டொனால்டு டிரம்ப் சந்திக்கிறார்
x
தினத்தந்தி 30 Dec 2016 7:27 AM GMT (Updated: 30 Dec 2016 7:27 AM GMT)

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா ‘ஹேங்கிங்’ நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக நடவடிக்கையை தொடங்கி உள்ள அமெரிக்கா முதல்கட்டமாக 35 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டு உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹேக்கிங் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷியாவின் 35 தூதரக அதிகாரிகளை வெளியேற பாரக் ஒபாமா உத்தரவிட்டார். 

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக உண்மை நிலையை தெரிந்துக் கொள்ள அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு உள்ள டொனால்டு டிரம்ப் உளவுத்துறை அதிகாரிகளை அடுத்தவாரம் சந்தித்து பேசுகிறார்.

“நம்முடைய நாடு மிகப்பெரிய மற்றும் சிறப்பான விஷயங்களை நோக்கி நகரவேண்டிய நேரமாகும் இது. இருப்பினும் தேசம் மற்றும் தேசத்தின் சிறந்த மக்களின் நலனுக்காக, உளவுத்துறை அதிகாரிகளை அடுத்த வாரம் சந்திக்க உள்ளேன், இப்போதைய நிலவரம் குறித்தான உண்மையான அப்டேட்டிற்கு,” என்று கூறிஉள்ளார் டொனால்டு டிரம்ப். ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கையை அடுத்து டொனால்டு டிரம்ப் வெளியிட்டு உள்ள அறிக்கையில் ரஷியாவினை நேரடியாக குறிப்பிடவில்லை. இதற்கிடைய டிரம்பின் மூத்த ஆலோசகர் இது நகர்வுக்கான நேரம் என்று கூறிஉள்ளார். 

“வரும் வாரங்களில் டொனால்டு டிரம்ப் உளவுத்துறை வட்டாரத் தகவல்களை பெறுகிறார். இது நகர்வுக்கான நேரம் என டிரம்ப் நம்புகிறார்,” என்று அவருடைய அலோசகர் கான்வே கூறிஉள்ளார். 

முந்தைய விபரம்:-
  
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் சபை வாக்குகளை அதிகமாக பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் வாக்குகளை அதிகளவில் பெற்றாலும் தேர்தல் சபை வாக்குகளை குறைவாக பெற்றதால் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை வெற்றி பெறச்செய்ததில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது. 

குறிப்பாக, ‘ரஷிய அரசுடன் தொடர்புடைய தனி நபர்கள், ஹிலாரியின் ஜனநாயக கட்சி தேசிய குழு மற்றும் ஹிலாரி பிரசார குழு தலைவர் பிரசாரம் தொடர்பான ஆயிரக்கணக்கான இ–மெயில்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக புகுந்து திருடி, விக்கி லீக்ஸ் இணையதளத்தின் மூலம் கசிய விட்டனர். ஹிலாரி தோற்பதற்காகவும், டிரம்ப் வெற்றி பெறுவதற்காகவும் இதை செய்துள்ளனர்’ என குற்றம் சாட்டியது. 

வெள்ளை மாளிகையும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலில் (திருட்டில்) ரஷிய அதிபர் புதினுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதாக கூறப்படும் ரஷியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒபாமா அறிவித்தார். இப்போது தேர்தலில் தலையிட்டது தொடர்பாக ரஷிய அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு தடை விதித்து பாரக் ஒபாமா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டு உள்ளார். வாஷிங்டன் மற்றும் சான் பிரான்ஸிகோவில் உள்ள ரஷிய தூதரகங்களில் பணியாற்றிய ரஷியாவை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. 

குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற மொத்தம் 72 மணிநேரம் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. ரஷியாவிற்கு எதிராக அதிரடி தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள அதிபர் ஒபாமா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் டிரம்ப் உளவுத்துறை அதிகாரிகளை சந்திக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story