ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து மொசூல் பல்கலைக்கழகத்தை ஈராக் படைகள் மீட்டன


ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து மொசூல் பல்கலைக்கழகத்தை ஈராக் படைகள் மீட்டன
x
தினத்தந்தி 15 Jan 2017 1:52 PM GMT (Updated: 15 Jan 2017 1:52 PM GMT)

ஈராக் நாட்டின் முக்கிய நகரமான மொசூல் நகரம், 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஐ.எஸ். இயக்கத்தினரின் பிடியில் உள்ளது. இந்த நகரம் மட்டும்தான் அங்கு இப்போது ஐ.எஸ். இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே முக்கிய நகரம் ஆகும்.

மொசூல்,

இந்த நகரத்தை மீட்டெடுப்பதற்காக ஹைதர் அலி அபாதி தலைமையிலான ஈராக் படைகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் அந்த பகுதிக்கு சென்று கடும் சண்டையிட்டு முன்னேறி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று ஐ.எஸ். இயக்கத்தினருடன் கடுமையாக சண்டையிட்டு, மொசூல் பல்கலைக்கழகத்தை ஈராக் படைகள் மீட்டு விட்டன. இதை ஈராக் அரசு டெலிவி‌ஷன் அறிவித்தது.

ஈராக் அதிகாரிகள் இதுபற்றி குறிப்பிடுகையில், ‘‘இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள பரிசோதனைக்கூடங்களை ஐ.எஸ். இயக்கத்தினர் ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது’’ என கூறினர்.

ஈராக் பயங்கரவாத தடுப்பு செயல்பாடுகள் பிரிவின் தலைவர் கூறும்போது, ‘‘மொசூல் பல்கலைக்கழக பகுதியை அரசு படைகள் மீட்டிருப்பது ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது’’ என குறிப்பிட்டார்.

ஈராக் ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டாலிப் ‌ஷகாத்தி இதுபற்றி குறிப்பிடுகையில், ‘‘ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து, நமது கதாநாயகன்கள் மாபெரும் அறிவியல், கலாசார கட்டிட வளாகத்தை விடுவித்து விட்டனர்’’ என்று கூறினார்.

மொசூல் நகரின் கிழக்கு பகுதியில் பாதிப்பகுதியை ஈராக் படைகள் தங்கள் வசம் கொண்டு வந்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் கூறுகின்றன.


Next Story