சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் பின்லேடன் கூட்டாளி உள்பட 11 பேர் சாவு


சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் பின்லேடன் கூட்டாளி உள்பட 11 பேர் சாவு
x
தினத்தந்தி 9 Feb 2017 9:35 PM GMT (Updated: 9 Feb 2017 9:35 PM GMT)

சிரியாவில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில் பின்லேடனின் கூட்டாளி உள்பட அல்கொய்தா இயக்கத்தினர் 11 பேர் கொல்லப்பட்டனர்.

வாஷிங்டன்

சிரியாவில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில் பின்லேடனின் கூட்டாளி உள்பட அல்கொய்தா இயக்கத்தினர் 11 பேர் கொல்லப்பட்டனர்.

பின்லேடன் கூட்டாளி

அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின்மீது விமானங்களை மோதி தாக்குதல் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன்.

இவரது நெருங்கிய கூட்டாளியாக திகழ்ந்தவர் அபு ஹனி அல் மாஸ்ரி.

சிரியாவில் பதுங்கியவர்

இந்த அல் மாஸ்ரிதான் ஆப்கானிஸ்தானில் 1980–1990 ஆண்டுகளில் அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களை உருவாக்கினார். அத்துடன், இவரது நேரடி கண்காணிப்பில்தான் அந்த முகாம்கள் செயல்பட்டு வந்தன.

இவர்தான் எகிப்தில் மத அடிப்படையிலான தற்கொலைப்படை பயங்கரவாதிகளை கொண்டு, பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய குழுவை முதன்முதலாக உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் என்று அமெரிக்கா சொல்கிறது.

இவர் சிரியாவில் இத்லிப் மாகாணத்தின் அருகே பதுங்கி இருப்பதை அமெரிக்கா கண்டறிந்தது.

ஆளில்லா விமான தாக்குதல்

அதைத் தொடர்ந்து அல் மாஸ்ரியும், அல்கொய்தா இயக்கத்தினரும் பதுங்கியுள்ளதாக தெரியவந்த இடத்தில், கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா அதிரடியாக ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தியது.

இந்த தாக்குதலில் அவரும், அவருடைய கூட்டாளிகள் 10 பேரும் கொல்லப்பட்டு விட்டனர். இது சிரியாவில் அல்கொய்தா இயக்கத்தினருக்கு மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது.

உறுதி செய்தது, அமெரிக்கா

இதுபற்றி அமெரிக்க ராணுவ அமைச்சகத்தின் மூத்த அதிகாரி எரிக் பாஹன், டி.வி.சேனல் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘அல்கொய்தா இயக்கத்தின் தலைவர்களான பின்லேடன், அய்மான் அல் ஜவாகிரி உள்ளிட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த அல் மாஸ்ரி, சிரியாவில் சனிக்கிழமை நாம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் தனது கூட்டாளிகள் 10 பேருடன் பலியாகி விட்டார்’’ என கூறினார்.

இதேபோன்று அமெரிக்க ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெப் டேவிஸ் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘சிரியாவில் அமெரிக்கா இரு வான்தாக்குதல்கள் நடத்தியது. ஒன்றில் பின்லேடனின் முன்னாள் கூட்டாளி அல் மாஸ்ரி கொல்லப்பட்டார். மற்றொரு தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 10 பேர் பலியாகினர். இந்த தாக்குதல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன’’ என குறிப்பிட்டார்.


Next Story