சீன மந்திரியுடன் இந்திய வெளியுறவு செயலாளர் பேச்சுவார்த்தை பீஜிங் நகரில் நடந்தது


சீன மந்திரியுடன் இந்திய வெளியுறவு செயலாளர் பேச்சுவார்த்தை பீஜிங் நகரில் நடந்தது
x
தினத்தந்தி 22 Feb 2017 10:30 PM GMT (Updated: 22 Feb 2017 8:33 PM GMT)

சீன தலைநகர் பீஜிங்கில், அந்த நாட்டு வெளியுறவு மந்திரியுடன் மத்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பீஜிங்,

வெளியுறவு செயலாளர் பயணம்

ஆசியாவில் மிகப்பெரும் சக்தியாக இயங்கி வரும் இந்தியாவும், சீனாவும் தங்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் வகையில் அடிக்கடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார்.

தலைநகர் பீஜிங்கில் அந்த நாட்டு வெளியுறவு மந்திரி வாங் யி மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடந்தது. இதில் அணு ஆயுதக்குறைப்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த இரு நாட்டு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

முக்கியமான நாடுகள்

இந்த பேச்சுவார்த்தை குறித்து வாங் யி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வளரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் உலகின் முக்கியமான நாடுகள் ஆகும். நாங்கள இதுபோன்ற சந்திப்புகளை அடிக்கடி நடத்த வேண்டும். இருநாட்டு உயர் அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்பு, இருதரப்புக்கு இடையேயான வெற்றிகரமான பேச்சுவார்த்தைக்கு மிகச்சிறந்த அடித்தளமாக அமையும்’ என்றார்.

இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இருதரப்புக்கு இடையே தொடர்புகளை அதிகரித்தல், தவறான புரிந்துணர்வை குறைத்தல், நம்பிக்கையை அதிகரித்தல், ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும் என்று கூறிய வாங் யி, இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான சாத்தியமான உறவுகளை கட்டியெழுப்பவும், சொந்த கட்டுப்பாடுகளின்படி செயல்படவும் முடியும் என்றும் தெரிவித்தார்.

உறவு வளர்கிறது

மத்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் கூறும்போது, ‘இரு நாடுகளுக்கு இடையே மறுகட்டமைப்பு செய்யப்பட்ட முக்கியமான பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறை. இருதரப்பு வெளிப்பாடுகளுக்கு அப்பால் நமது உறவு வளர்ந்து வருவதையே இது காட்டு கிறது’ என்றார்.

ஜி20, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு போன்ற அமைப்புகளில் இரு நாடுகளும் உறுப்பினராய் இருப்பதை சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர், இது ஏராளமான பிரச்சினைகளில் பொது வழியை கண்டடைய உதவிகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் அவர் சீனாவின் நிர்வாக துணை வெளியுறவு மந்திரி சாங் யெசாய்-ஐயும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மசூத் அசாருக்கு தடை விவகாரம்

பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு ஐ.நா. தடை விதிக்க இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு சீனாவின் ஆதரவை மீண்டும் கேட்டுக்கொண்ட ஜெய்சங்கர், இது தொடர்பான இந்தியாவின் விண்ணப்பத்துக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவை என்றும் வலியுறுத்தினார்.

வருகிற மே மாதம் சீனாவில் நடைபெற இருக்கும் ‘ஒரு மண்டலம், ஒரே சாலை’ மாநாட்டில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து அந்த நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெய்சங்கர், இது குறித்து இந்தியா முடிவு செய்யுமுன், இந்தியாவின் இறையாண்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சீனாவை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். 

Next Story