எனது கணவரின் கொலை தொடர்பாக அமெரிக்க அரசிடம் இருந்து தக்க பதில் தேவை மனைவி பேட்டி


எனது கணவரின் கொலை தொடர்பாக அமெரிக்க அரசிடம் இருந்து தக்க பதில் தேவை மனைவி பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2017 9:21 AM GMT (Updated: 25 Feb 2017 9:21 AM GMT)

எனது கணவர் கொலை தொடர்பாக எனக்கு அமெரிக்க அரசிடம் இருந்து பதில் தேவை. இது போன்ற குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கபோகிறார்கள் என சீனிவாசின் மனைவி கூறினார்

வாஷிங்டன்

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஒலாத்தே என்ற இடத்தில் கார்மின் என்ற நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தவர், சீனிவாஸ் குச்சிபோட்லா (வயது 32). ஐதராபாத்தை சேர்ந்த இவர், கடந்த 22-ந் தேதியன்று இரவு தனது சக என்ஜினீயரும், நண்பருமான அலோக் மதசானி என்பவருடன் (இவர் தெலுங்கானா மாநிலம், வாராங்கல்லை சேர்ந்தவர்) அங்குள்ள ‘ஆஸ்டின்ஸ் பார்’ என்ற மது விடுதிக்கு சென்றிருந்தார்.

நண்பர்கள் இருவரும் மது அருந்தியவாறு, அங்குள்ள தொலைக்காட்சி பெட்டியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த கூடைப்பந்து போட்டியை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே ஒரு அமெரிக்கர் வந்தார். அவர், அவர்களின் தோற்றத்தை வைத்து, அவர்கள் இந்தியர்கள் என்பதைக் கண்டு கொண்டார். உடனே அவர் ஆத்திரம் அடைந்தார். அவர்களை நோக்கி, “நீங்கள் எப்படி இங்கே வரலாம்? எங்கள் நாட்டில் நீங்கள் எப்படி வேலை பார்க்கலாம்? என்னை விட நீங்கள் எதில் உயர்ந்து விட்டீர்கள்?” என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

இந்தக் கேள்விகள் சீனிவாசுக்கும், அலோக்குக்கும் மன வேதனையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர்களுக்கும், அந்த அமெரிக்கருக்கும் இடையே வாய்த்தகராறு மூண்டது. ஒரு கட்டத்தில் அந்த அமெரிக்கர் அங்கிருந்து வெளியேறினார். அத்துடன் பிரச்சினை முடிவுக்கு வந்தது என்றுதான் அங்கிருந்தவர்கள் நினைத்தனர்.

ஆனால் நடந்தது வேறு.

வெளியேறிய அமெரிக்கர் சில நிமிடங்களில் கையில் துப்பாக்கியுடன் மீண்டும் அங்கு வந்தார். வந்தவர், சீனிவாசையும், அவரது நண்பர் அலோக்கையும் நோக்கி “நாட்டை விட்டு வெளியே போ... பயங்கரவாதி...” என்று சத்தமாய் கூறிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டு வீழ்த்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.

இதில் ரத்த வெள்ளத்தில், சம்பவ இடத்திலேயே சீனிவாஸ் பிணமானார். அவரது நண்பர் அலோக் படுகாயம் அடைந்தார். அவர்களுடன், துப்பாக்கிச்சூட்டை தடுக்க முயன்ற இயன் கிரில்லாட் (24) என்ற அமெரிக்கரும் காயம் அடைந்தார்.

அலோக்கும், இயன் கிரில்லாட்டும் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த இனவெறி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில், குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

அவர் அமெரிக்க கடற்படை வீரர் ஆதம் புரிண்டன் (51) என தெரியவந்துள்ளது. அவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட என்ஜினீயர் சீனிவாசுக்கு சுனயானா என்ற மனைவி உள்ளார். மனைவி கர்ப்ப்பமாக உள்ளார்.

இனவெறி படுகொலைக்கு சீனிவாஸ் ஆளாகி இருப்பது கண்டு, மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட சீனிவாசனின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆதரவாக, தன்னார்வலர்கள் சிலர் நிதி திரட்டி வருகின்றனர்.

இதுவரையிலும், ரூ. 2 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. சீனிவாஸ் உயிரிழந்தாலும், அவரது குடும்பத்தினருக்கு, இந்த நிதி உதவி பயன்படும் என்றும் தன்னார்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தனது கணவர் கொலை செய்யபட்டது குறித்து அவரது மனைவி சுனாயனா துமாலா கூறியதாவது:-

எனது கணவர் கொலை தொடர்பாக எனக்கு அமெரிக்க அரசிடம் இருந்து பதில் தேவை. இது போன்ற குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கபோகிறார்கள். அமெரிக்காவில் நாம் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்று தன் கணவரிடம் கேட்டதற்கு, 'நல்ல விஷயங்கள் நடக்கும்'  சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கூறினார்.



Next Story