தென்கொரியாவில் பதவி பறிக்கப்பட்ட பெண் அதிபரை கைது செய்ய கோரிக்கை வலுக்கிறது


தென்கொரியாவில் பதவி பறிக்கப்பட்ட பெண் அதிபரை கைது செய்ய கோரிக்கை வலுக்கிறது
x
தினத்தந்தி 11 March 2017 9:45 PM GMT (Updated: 11 March 2017 8:12 PM GMT)

தென்கொரியாவில் பதவி பறிக்கப்பட்ட பெண் அதிபரை கைது செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

சியோல்,

தென்கொரியாவில் நெருங்கிய தோழி சோய் சூன் சில்லுடனான ஊழல் வழக்கில், பெண் அதிபர் பார்க் கியுன் ஹையின் பதவியை பறித்து அரசியல் சாசன கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை அடுத்து பார்க் கியுன் ஹை அதிபர் மாளிகையை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளார். சியோலில் உள்ள தனது சொந்த பங்களா சீரமைக்கப்படும் வரையில் அவர் அதிபர் மாளிகையில்தான் தங்கி இருப்பார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனாலும் அங்கு தொடர்ந்து அரசியல் சாசன கோர்ட்டு தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே பார்க் கியுன் ஹையை கைது செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

இதுகுறித்து தீர்ப்புக்கு ஆதரவாக களமிறங்கி போராடி வருகிற குழுவின் செய்தி தொடர்பாளர், சியோலில் நேற்று கூறும்போது, “அதிபர் பதவிக்குரிய விலக்குரிமையை இழந்து விட்ட நிலையில், பார்க் கியுன் ஹையை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதுதான் எங்களது கோரிக்கை” என்று கூறினார்.

இதற்கிடையே மே 9-ந் தேதிக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்படும் என்று அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.

தற்போது ஜனநாயக கட்சியின் மூன் ஜே கருத்துக்கணிப்பு ஒன்றில் முன்னணியில் உள்ளார். அவர் தனக்கு அடுத்தபடியாக வந்துள்ள தற்காலிக அதிபர் ஹவாங் கியோ ஆனை விட 22 சதவீதம் கூடுதல் ஆதரவு பெற்றுள்ளார். 

Next Story