சீன பள்ளிக்கூடத்தில் கழிவறைக்கு செல்வதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 குழந்தைகள் பலி


சீன பள்ளிக்கூடத்தில் கழிவறைக்கு செல்வதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 குழந்தைகள் பலி
x

சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் கழிவறைக்கு செல்வதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 குழந்தைகள் பலியானார்கள்.

பீஜிங்,

சீனாவில் ஹெனான் மாகாணத்தில் புயாங் நகரில் மூன்றாம் எண் சோதனை தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை 8.30 மணிக்கு இடைவேளை விடப்பட்டது. இந்த இடைவேளையை குழந்தைகள் சிறுநீர் கழிப்பது, தண்ணீர் குடிப்பது போன்றவற்றுக்காக பயன்படுத்திக்கொள்வார்கள்.

 இப்படி இடைவேளை விட்டபோது குழந்தைகள் கழிவறைக்கு கூட்டமாக சென்றதாகவும், அப்போது அங்கு நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள் கீழே விழ,  அவர்களின் மீது மற்றவர்கள் ஏறிச்செல்லுகிற அவல நிலை நேரிட்டது.

இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. 20 குழந்தைகள் காயம் அடைந்தன. காயம் அடைந்த குழந்தைகள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிற குழந்தைகளின் பெற்றோர், அங்கு விரைந்து தங்கள் குழந்தைகள் பற்றி கேட்டறிந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் அங்கு இப்படிப்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது புதிதல்ல என்று அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 2014-ம் ஆண்டு தென்மேற்கு சீனா பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மாடிப்படிக்கட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் பலியாகியதும், 25 குழந்தைகள் படுகாயம் அடைந்ததும் நினைவுகூரத்தக்கது.

Next Story