செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி கையெழுத்திட்ட டொனால்டு டிரம்ப்


செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி கையெழுத்திட்ட டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 22 March 2017 11:04 AM GMT (Updated: 2017-03-22T16:34:11+05:30)

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.வாஷிங்டன்

பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக ’மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற விண்கலத்தை  2003-ம் ஆண்டில்  அனுப்பியது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர்  புகைபடங்களை எடுத்து அனுப்பி வருகிறது.

இது போல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த 2013 ஆண்டு நவம்பர் 5–ந் தேதி  அனுப்பபட்டு உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வரும் 2033-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தற்போது 2033 ம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு நாசாவுக்கு அனுமதி வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இத்திட்டத்திற்கென 19.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மசோதாவின் கீழ் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதோடு மட்டுமின்றி விண்வெளி ஆய்வுகள், ஒரியன் விண்கலத்திற்கான பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தவிர விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2030க்குள் செவ்வாய் கிரகத்தின் அருகில் அல்லது அதன் மேற்பரப்பில் மனிதர்கள் செல்ல ஏதுவான நீண்ட கால திட்டத்தினை வகுக்கவும், அதற்கான விண்கலத்தை உருவாக்கவும் நாசாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story