அமெரிக்காவில் புதிய காப்பீடு மசோதா தோல்வியால் டிரம்ப் ஏமாற்றம் சொந்த கட்சியினரே எதிர்ப்பு


அமெரிக்காவில் புதிய காப்பீடு மசோதா தோல்வியால் டிரம்ப் ஏமாற்றம் சொந்த கட்சியினரே எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 March 2017 5:32 PM GMT (Updated: 25 March 2017 5:40 PM GMT)

அமெரிக்காவில் ‘ஒபாமாகேர்’ என்ற மருத்துவக்காப்பீடு திட்டம் முந்தைய ஒபாமா நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் ‘ஒபாமாகேர்’ என்ற மருத்துவக்காப்பீடு திட்டம் முந்தைய ஒபாமா நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து வந்த டொனால்டு டிரம்ப், இதற்கு பதிலாக புதிய காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என தனது தேர்தல் பிரசாரத்தின் போதே அறிவித்தார். அதன்படி ஒபாமாகேர் திட்டத்தை நீக்க வகை செய்யும் புதிய காப்பீடு மசோதா ஒன்று உருவாக்கப்பட்டது.

இது பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தமுள்ள 435 உறுப்பினர்களில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 235 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் இந்த மசோதா எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவுக்கு டிரம்பின் சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமல் மசோதா தோல்வியடைந்தது. டிரம்ப் சார்பில் மசோதாவை தாக்கல் செய்த சபாநாயகர் பால் ரியான், மசோதாவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனால் ஒபாமாகேர் திட்டம் அமலில் இருக்கும்.

புதிய காப்பீடு மசோதா தோல்வியடைந்ததால் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கும் ஜனாதிபதி டிரம்ப், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரை குறைகூறியுள்ளார். தவறான வி‌ஷயங்கள் நடக்கப்போவதாக எச்சரித்துள்ள அவர், காப்பீடு பிரிமியம் திடீரென உயர்வதை மக்கள் பார்ப்பார்கள் எனக்கூறியுள்ளார்.

அமெரிக்காவில் ஒரு மசோதாவை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ உறுப்பினர்களுக்கு முழு உரிமை உண்டு. இந்தியாவைப்போல கட்சித்தலைமைக்கு கட்டுப்பட்டு ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story