ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூன்று இந்திய உளவு அமைப்பினரை கைது செய்ததாக பாகிஸ்தான் தகவல்


ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூன்று  இந்திய உளவு அமைப்பினரை கைது செய்ததாக பாகிஸ்தான் தகவல்
x
தினத்தந்தி 15 April 2017 6:37 AM GMT (Updated: 2017-04-15T12:07:23+05:30)

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூன்று இந்திய உளவு அமைப்பினரை கைது செய்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்லமபாத்,

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் யாதவிற்கு,  பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய  உளவு அமைப்பான ரா” அமைப்பைச்சேர்ந்த 3 இந்தியர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. 

பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான அந்த செய்தியில், மூன்று இந்திய ”ரா” உளவு ஏஜெண்டுகளும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது, பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட் பகுதி டிஐஜி சஜ்ஜாட் ஹூசைன் உறுதி செய்துள்ளார். காலில், இம்தியாஸ், ரஷித் ஆகிய மூன்று பயங்கரவாதிகளை நாங்கள் கைது செய்துள்ளோம். இந்த மூன்று நபர்களும் இந்திய உளவு அமைப்பான ரா” விற்காக பணம் பெற்றுக்கொண்டு செயல்படும் ஏஜெண்டுகள் ஆவர். இந்திய ராணுவ அதிகாரிகள் சிலருடன் தனக்கு தொடர்பு இருப்பதை கைதான ரா ஏஜெண்ட்டுகள் ஒப்புக்கொண்டனர்” என்று ஹூசைன் தெரிவித்தாக பாகிஸ்தானின் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேருக்கும் ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவது, சீனா-பாகிஸ்தான் இடையேயான பொருளாதாரப்பாதை திட்டத்தை முடக்குவது ஆகிய பணிகள் ஒதுக்கப்பட்டு இருந்ததாக  பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கலில் என்ற இந்தியர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் எல்லைக்கட்டுப்பாடு பகுதியை தவறுதலாக கடந்த பாகிஸ்தான் பகுதிக்குள்  சென்றவர் எனவும், அப்பஸ்பூர் காவல் நிலைய தாக்குதலை திட்டமிட்டு அரங்கேற்றியவர் இந்த கலில் தான் எனவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Next Story