‘அணு ஆயுதங்களை கொண்டு பதிலடி கொடுப்போம்’ அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை


‘அணு ஆயுதங்களை கொண்டு பதிலடி கொடுப்போம்’ அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-16T00:28:51+05:30)

முழுமையான போர் தொடுத்தால் அணு ஆயுதங்களை கொண்டு பதிலடி கொடுப்போம் என அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சியோல்,

வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 5 முறை அணுகுண்டு சோதனைகளையும், எண்ணற்ற முறை ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, அந்த நாடு உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஐ.நா. சபையும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளபோதும், வடகொரியா அதற்கெல்லாம் அடங்குவதாக இல்லை. 6–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த அந்த நாடு தயாராகி வருவதாக செயற்கைகோள் படங்கள் அம்பலப்படுத்தின. எந்த நேரத்திலும் அந்த சோதனையை நடத்துவதற்கு அந்த நாட்டின் ஆட்சியாளர் கிம் ஜாங் அன் உத்தரவிடுவார் என கூறப்படுகிறது.

போர்ப்பதற்றம்

இந்த நிலையில் வடகொரியாவை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன் பங்குக்கு வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். இதற்காக அவர் ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளார்.

அவரது உத்தரவின்பேரில் கொரிய தீபகற்ப பகுதிக்கு அமெரிக்காவின் வலிமை மிகுந்த யுஎஸ்எஸ் காரல் வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பலும், யுஎஸ்எஸ் வேனே இ மேயர், யுஎஸ்எஸ் மைக்கேல் மர்பி நாசகார கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5 ஆயிரம் கடற்படை வீரர்களும் உள்ளனர். எந்த நேரத்திலும் வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது.

ராணுவ அணிவகுப்பு

இந்த நிலையில், வடகொரிய நாட்டை நிர்மாணித்த கிம் இல் சுங்கின் 105–வது பிறந்த தினம் நேற்று (சனிக்கிழமை) அங்கு கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பியாங்யாங் நகரில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் வடகொரியாவின் படை பலத்தை காட்டுகிற வகையில் பீரங்கிகள், கவச வாகனங்கள், தளவாடங்கள் இடம் பெற்றிருந்தன.

முதல் முறையாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்டு, ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரிகளின் இலக்குகளை துவம்சம் செய்ய ஏற்ற ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன. ராணுவ ‘பேண்ட்’ வாத்தியங்கள் முழங்கின. வடகொரிய ராணுவ வீரர்கள் வாள் ஏந்தி வீர நடைபோட்டனர்.

இந்த அணிவகுப்பை வடகொரிய ஆட்சியாளர் கிம் ஜாங் அன் பார்வையிட்டார்.

‘திருப்பியடிக்க தயார்’

கிம் இல் சுங் சதுக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை அவர் வீர வணக்கம் செலுத்தி ஏற்றுக்கொண்டார்.

கிம் இல் சுங்கின் 105–வது பிறந்த தினத்தை சுட்டிக்காட்டும் வகையில் வானில் 105 ராணுவ விமானங்கள் அணி வகுத்துக்காட்டின.

இந்த அணிவகுப்பையொட்டி, வடகொரியாவின் 2–வது உச்சகட்ட அதிகார மையம் என வர்ணிக்கப்படுகிற உயர் ராணுவ அதிகாரி சோய் ரியாங் ஹெய் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:–

அமெரிக்காவின் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கு இந்த நாடு தயாராக உள்ளது.

கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப்பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் ஜனாதிபதி டிரம்ப் கடற்படை அணியை அனுப்பி வைத்திருப்பது கண்டனத்துக்கு உரியது.

 வடகொரியா மீது முழுமையான ஒரு போர் தொடுக்கப்பட்டால், அந்தப் போரில் நாங்கள் பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம். எந்தவொரு அணு ஆயுத தாக்குதலுக்கும் எங்கள் பாணியில் அணு ஆயுதங்களை கொண்டு திருப்பித் தாக்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story