அருணாச்சல பிரதேசத்தில் பெயரை மாற்ற எங்களுக்கு உரிமை உள்ளது சீனா மீண்டும் அடாவடி


அருணாச்சல பிரதேசத்தில் பெயரை மாற்ற எங்களுக்கு உரிமை உள்ளது சீனா மீண்டும் அடாவடி
x
தினத்தந்தி 21 April 2017 10:43 AM GMT (Updated: 21 April 2017 10:42 AM GMT)

அருணாச்சல பிரதேசத்தில் பெயரை மாற்ற எங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என சீனா மீண்டும் அடாவடியாக கூறிஉள்ளது.

பெய்ஜிங்,

அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு தீபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில், திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லமா அண்மையில் அருணாச்சல பிரதேசம் சென்றார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், சீனாவின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா தலாய்லாமா பயணத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டது. 

இதனால், இந்தியா மீது சீனா கடும் அதிருப்தியில் உள்ளது. இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 6 இந்திய பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சூட்டியுள்ளதாகவும், அவை தனக்குச் சொந்தமானவை எனவும் கூறி, சீனா புதிய அறிவிப்பை வெளியிட்டது. 

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா “அண்டை நாடுகளில் உள்ள மாநிலத்திற்கு புதிய பெயரை சூட்டும் நடவடிக்கையானது சட்டவிரோத ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்கிவிடாது” என்றது. 

இந்நிலையில் சீனா மீண்டும் அடாவடியாக அருணாச்சல பிரதேசத்தில் பெயரை மாற்ற எங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்று கூறிஉள்ளது. “இந்தியா-சீனா கிழக்குப்பகுதி எல்லை விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் சீரானது” என கூறிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லு காங், இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மோம்பா இனக்குழுவினர் மற்றும் திபெத்திய சீனர்களுக்கு தொடர்புடைய பெயர்கள் பயன்படுத்தப்படுகிறது. சட்டபூர்வ உரிமையின்படி இந்த பெயர்களை மாற்றவும், பிரபலப்படுத்தவும் சட்டப்பூர்வ நடவடிக்கையானது எடுக்கப்பட்டு உள்ளது,” என கூறிஉள்ளார்.

Next Story