பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பின் கீழ் அல் ஜவஹிரி: அமெரிக்க ஊடகம் தகவல்


பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பின் கீழ் அல் ஜவஹிரி:  அமெரிக்க ஊடகம் தகவல்
x
தினத்தந்தி 22 April 2017 10:53 AM GMT (Updated: 22 April 2017 10:52 AM GMT)

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு பாதுகாப்பின் கீழ் அல் கொய்தா இயக்க தலைவர் அய்மன் அல் ஜவஹிரி கராச்சியில் பதுங்கி இருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

எகிப்து நாட்டில் பிறந்தவரான ஜவஹிரி பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராவார்.  இவர் பின்லேடனால் தோற்றுவிக்கப்பட்ட அல் கொய்தா இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அல் கொய்தா இயக்கத்தினை அமெரிக்க படைகள் வெளியேற்றியதில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பு ஆன ஐ.எஸ்.ஐ.யின் பாதுகாப்பின் கீழ் ஜவஹிரி இருந்து வருகிறார் என அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூஸ்வீக் என்ற ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

அதன் புலனாய்வு கட்டுரையில் வெளியாகியுள்ள தகவலில், அரேபிய கடல் பகுதியினை ஒட்டிய 2.6 கோடி மக்கள் வசிக்கும் துறைமுக நகரான கராச்சியில் ஜவஹிரி பதுங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அமெரிக்காவில் கடந்த காலத்தில் 4 ஜனாதிபதிகளுக்கு தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான முக்கிய ஆலோசகராக இருந்த புரூஸ் ரீடெல் கூறும்பொழுது, அபோதாபாத்தில் (பாகிஸ்தான்) இருந்து கிடைத்த தகவல் உள்பட ஜவஹிரி அங்கிருப்பதற்கான சிறந்த அடையாளங்கள் உள்ளன.  பின்லேடன் அபோதாபாத் நகரில் கொல்லப்பட்டார்.  அந்த அடிப்படையில் இத்தகவல் சரியாக இருக்கலாம்.

அமெரிக்கர்கள் வந்து பிடித்து செல்ல முடியாது என கருதி தனக்கான வசதியான இடம் இதுவாக இருக்கும் என கராச்சியில் ஜவஹிரி பதுங்கியிருக்கலாம் என ரீடெல் கூறியுள்ளார்.

ஜவஹிரி ஆப்கானிஸ்தானில் பதுங்கினால் அவரை பிடிப்பதற்கான முயற்சிகள் எளிமையாகி விடும்.  ஆனால் கராச்சியில் அது மிக கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த ஊடக தகவலில், கடந்த 2016ம் ஆண்டு ஜனவரியில், ஜவஹிரியின் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியில் முடிந்தது.  ஜவஹிரி தங்கியிருந்த அறைக்கு அடுத்த இடத்தில் ஏவுகணை விழுந்துள்ளது.  அதனை ஒட்டிய சுவர் இடிந்து, அதன் இடிபாடுகள் அவர் மீது விழுந்துள்ளது.  ஆனால் அதிர்ஷ்டவசமுறையில் அவர் பிழைத்து விட்டார் என பெயர் வெளியிட விரும்பிடாத பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் இந்த தகவலை ஊடகத்திற்கு பகிர்ந்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலில் ஜவஹிரியின் 4 பாதுகாவலர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.  ஒருவர் காயமுற்றுள்ளார்.  பின்னர் அவரும் இறந்து விட்டார் என கூறியுள்ள அந்நபர், ஏவுகணை தாக்குதல் நடப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன் அந்த அறையை விட்டு தூங்குவதற்காக ஜவஹிரி சென்று விட்டார் என்றும் கூறியுள்ளார்.

66 வயது நிறைந்த ஜவஹிரி பல்வேறு ஏவுகணை தாக்குதல்களில் இருந்தும் தப்பித்துள்ளார் என்றும் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

Next Story