உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 9 May 2017 7:48 PM GMT (Updated: 2017-05-10T01:17:50+05:30)

உலகைச் சுற்றி...

* அமெரிக்கரான பியாங்யாங் அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் கிம் ஹாக் சாங் வடகொரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து இதுவரை 4 அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவை கவலையில் ஆழ்த்தி உள்ளது. அவர்களை விடுவிப்பது தொடர்பாக சுவீடன் தூதரகம் மூலமும், வெளியுறவுத்துறை மூலமும் முயற்சிகள் நடப்பதாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறுகிறது.

* அமெரிக்கா சென்று, அந்த நாட்டின் பிரஜையை மணந்து, 2 மகள்களை பெற்றெடுத்தவர் சீக்கிய கார் டிரைவர் குர்முக் சிங். இவர் 20 ஆண்டு காலமாக அங்கு வசித்து வருகிறார். இந்த நிலையில் டிரம்பின் புதிய நிர்வாகம், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருக்கிறவர்கள் மீது நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. இதில் குர்முக் சிங்கும் சிக்கினார். கைது செய்யப்பட்டுள்ள அவர், விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தெரிகிறது.

* வங்காளதேசத்தில் ஈஸ்வர்கஞ்ச் பகுதியில் சிறுபான்மை அகமதியா இனத்தை சேர்ந்த மத குரு முஸ்தபிசூர் ரகுமான் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். மசூதியில் வைத்து அவர் தாக்கப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* தாய்லாந்து நாட்டில் பட்டாணி நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு எதிரே நேற்று கார் குண்டு வெடித்தது. இதில் 42 பேர் படுகாயம் அடைந்தனர். தனி நாடு கேட்டு ஆயுதமேந்தி போராடி வருகிற பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

Next Story