ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பற்றிய ரகசிய தகவலை ரஷிய மந்திரியிடம் டிரம்ப் பகிர்ந்து கொண்டாரா?


ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பற்றிய ரகசிய தகவலை ரஷிய மந்திரியிடம் டிரம்ப் பகிர்ந்து கொண்டாரா?
x
தினத்தந்தி 16 May 2017 10:30 PM GMT (Updated: 16 May 2017 6:56 PM GMT)

ஐ.எஸ். அமைப்பு பற்றிய ரகசிய தகவலை ரஷிய மந்திரியிடம் டிரம்ப் பகிர்ந்து கொண்டார் என அமெரிக்க ஊடகத்தில் வெளியான தகவலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் வெற்றியைத் தடுக்கவும், குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்பின் வெற்றியை உறுதி செய்யவும் ரஷியாவின் தலையீடு இருந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) விசாரித்து வருகிறது.

இது டிரம்புக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

டிரம்ப்–ரஷிய மந்திரி சந்திப்பு 

இந்த நிலையில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் கடந்த வாரம் வாஷிங்டன் வந்தார். அவர் அங்குள்ள ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, ரஷிய மந்திரி செர்கெய் லாவ்ரோவிடம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பற்றிய அதி முக்கிய ரகசிய தகவல் ஒன்றை டிரம்ப் பகிர்ந்து கொண்டார் என்று அமெரிக்க ஊடகமான ‘வாஷிங்டன் போஸ்ட்’ கூறி உள்ளது.

அந்த தகவல், ரஷியாவிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாத தகவல் என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட தகவலை, ரஷிய மந்திரியிடம் டிரம்ப் பகிர்ந்துகொண்டார் என வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டில்லர்சன் விளக்கம் 

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், ‘‘அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய மந்திரி செர்கெய் லாவ்ரோவிடம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள், அவற்றை ஒடுக்கும் முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பரந்த வி‌ஷயங்கள் குறித்து விவாதித்தார். அந்த விவாதத்தின்போது, குறிப்பிட்ட பயங்கரவாத அச்சுறுத்தல்களின் இயல்புகள் குறித்து பேசப்பட்டது. ஆனால் அந்த அச்சுறுத்தல் எங்கிருந்து வந்தது என்பது பற்றியெல்லாம் பேசப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 

டிரம்ப், செர்கெய் லாவ்ரோவ் சந்திப்பின்போது உடனிருந்தவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மெக்மாஸ்டர்.

அவர் அமெரிக்க ஊடக தகவலை மறுத்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘விமானங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல், பயங்கரவாத அமைப்புகளால் ஏற்பட்டுள்ள பொதுவான அச்சுறுத்தல்கள் பற்றித்தான் அமெரிக்க ஜனாதிபதியும், ரஷிய மந்திரியும் ஆய்வு செய்தார்கள். எந்தவொரு உளவு தகவலையும், அதற்கான ஆதாரங்களையும், ராணுவ நடவடிக்கைகளையும் பற்றி ரஷிய மந்திரியிடம் அமெரிக்க ஜனாதிபதி பகிர்ந்து கொள்ளவில்லை. எனவே இது தொடர்பாக வந்துள்ள தகவல்கள் தவறானவை. இரு நாடுகளும் எதிர்கொண்ட பொதுவான அச்சுறுத்தல்கள்பற்றி மட்டுமே ஜனாதிபதி விவாதித்தார்’’ என கூறினார்.

எதிர்க்கட்சி அறிக்கை 

அதே நேரத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் தலைவர் நான்சி பெலோசி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ‘‘ஊடகத்தில் வந்த தகவலில் உண்மை உள்ளது என்றால், உளவுத்தகவல்களில் டிரம்ப் சமரசம் செய்து கொண்டிருக்கிறார். அவர் சூசகமாக தெரிவித்திருந்தால்கூட அது அபாயகரமானது. உள்நோக்கத்துடன் அவர் அந்த தகவலை தெரிவித்திருந்தால் அது இன்னும் அபாயகரமானது’’ என கூறி உள்ளார்.

Next Story