வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி அதிரடி


வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி அதிரடி
x
தினத்தந்தி 21 May 2017 9:42 AM GMT (Updated: 21 May 2017 9:42 AM GMT)

வடகொரியா மீண்டும் அதிரடியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது.


சியோல், 


வடகொரியா, ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அணுக்குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

 இதற்காக ஐ.நா. சபையும், அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளும் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இப்போதும், அந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. வடகொரியாவின் அணுக் குண்டு, ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். வடகொரியாவுக்கு மிரட்டல் விடுக்கிற நிலையில், யுஎஸ்எஸ் காரல் வின்சன் என்ற விமானம்தாங்கி கப்பலுடன் கூடிய கடற்படை அணியை கொரிய தீபகற்ப பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதனால் கொரிய தீபகற்பகத்தில் போர் பதற்றம் தீவிரமாகியது.

இதனையடுத்து வடகொரியாவுடன் போர் என்பது பலனளிக்காது, பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படலாம் என உலக தலைவர்கள் கூறியதும், போர் பதற்றம் சற்று தணிந்தது. இருப்பினும் வடகொரியா விடுவதாக தெரியவில்லை, தொடர்ந்து ஏவுகணை சோதனையை செய்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது. அது கண்டம் விட்டு கண்டம் தாவும் திறன் கொண்டது எனவும், அது அமெரிக்காவை தாக்குவதற்கு சாத்தியம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
அதுமட்டுமின்றி மீண்டும் ஒரு ஏவுகணை சோதனைக்கு தயாராகி வருவதாகவும், அது வடகொரியாவின் புங்கியில் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்தது. நிலைநிறுத்தப்பட்டுள்ள ஏவுகணை எந்நேரமும் சோதனைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவ்வாறு சோதனை நடத்தப்பட்டால் தென்கொரியாவின் முக்கிய பகுதியில் அந்த ஏவுகணை வந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்தது. இந்நிலையில் இன்று வடகொரியா அதிரடியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது என தென் கொரியா தெரிவித்து உள்ளது. வடகொரியா எச்சரிக்கையும் மீறி ஆத்திரமூட்டும் வகையில் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு உள்ளது மீண்டும் பதற்றத்தை அதிகரிக்க செய்து உள்ளது.

Next Story