இலங்கையில் மழை–வெள்ளம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்ந்தது


இலங்கையில் மழை–வெள்ளம்: பலி எண்ணிக்கை  164 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 29 May 2017 7:34 AM GMT (Updated: 29 May 2017 7:34 AM GMT)

இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு,

இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த பேய் மழையால் நாட்டின் தென்மேற்கு பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.15 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வீடுகளை இழந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 104 பேர் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.88 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இலங்கையின் முப்படையினர் முழுவீச்சில் மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்நாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஹெலிகாப்டர் சேதம் ஆனது. பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதியது. 
எனினும் அதில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்த பைலட்டின் திறமையை  இலங்கை அதிபர்  மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார். 

கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று நகர தொடங்கியுள்ளதால் இன்னும் இரண்டு தினங்களுக்கு இலங்கையில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.

Next Story