வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்படலாம் என அச்சம் காப்பீடு செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு


வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்படலாம் என அச்சம் காப்பீடு செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2017 7:20 AM GMT (Updated: 22 Jun 2017 7:20 AM GMT)

வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்படலாம் என அச்சம் காரணமாக அமெரிக்காவில் காப்பீடு செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வேற்று கிரகங்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியை நிறுவி, ஆராய்ச்சி செய்து வருகிறது.

இதன் முடிவுகள் கடந்த சில தினங்களுக்குள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வேற்று கிரகவாசிகள் பற்றிய தகவல்கள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் கலிபோர்னியாவில் நாசா விஞ்ஞானி மரியோ பெரஸ் நேற்று முன்தினம் நாசா மேற்கொண்ட கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் 219 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகங்களுடன் சேர்த்து, இப்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ள மொத்த கிரகங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 34 என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

இவ்வாறு புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், வேற்று கிரகவாசிகளால் தாங்கள் ஒருவேளை கடத்தப்பட்டுவிடக்கூடும் என கருதி அமெரிக்காவில் 40 ஆயிரம் பேர் காப்பீடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Next Story