வங்காளதேசத்தில் கோர விபத்து லாரி கவிழ்ந்து 16 தொழிலாளர்கள் நசுங்கி சாவு


வங்காளதேசத்தில் கோர விபத்து லாரி கவிழ்ந்து 16 தொழிலாளர்கள் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 24 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-25T01:39:33+05:30)

வங்காளதேசத்தில் லாரி கவிழ்ந்து 16 தொழிலாளர்கள் நசுங்கி சாவு.

டாக்கா, 

வங்காளதேசத்தில் ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக தொழிலாளர்கள் சிலர் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி சென்ற ஒரு லாரியில் நேற்று பயணம் செய்தனர்.

இந்த லாரி, நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ராங்பூரில் சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அதைத் தொடர்ந்து அந்த லாரி, அந்தப் பகுதியில் சாலையோரத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, வழியில் மரணம் அடைந்தனர்.

பலியானவர்களில் 4 பேர் பெண்கள். ஒரு 10 வயது சிறுமியும் பலியானவர்களில் அடங்குவாள்.

லாரி கவிழ்ந்து சிமெண்ட் மூட்டைகள் சரிந்ததில் மூட்டைக்கு அடியில் சிக்கியதில் தொழிலாளர்கள் நசுங்கி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பலியானவர்கள் அத்தனைபேரும் ஏழை கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜிப்பூர் என்ற இடத்தில் இருந்து லால்மோனிர்ஹட் என்ற இடத்துக்கு அவர்கள் சென்றபோதுதான் இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story