தாய்ப்பால் கொடுக்க மறுப்பது குழந்தைகள் உரிமை மீறலாகும்: யுனிசெப்


தாய்ப்பால் கொடுக்க மறுப்பது குழந்தைகள் உரிமை மீறலாகும்: யுனிசெப்
x
தினத்தந்தி 31 July 2017 9:51 AM GMT (Updated: 31 July 2017 9:51 AM GMT)

தாய்ப்பால் கொடுக்க மறுப்பது குழந்தைகளின் உரிமை மீறலாகும் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

நியூயார்க்,

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்டு 1ல் இருந்து 7ந்தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தாய்ப்பால் கொடுக்கும் வழக்கத்தினை குடும்பங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஐ.நா. அமைப்பு நடத்தி வருகிறது.

இந்நிலையில், கேரளா மற்றும் தமிழகத்திற்கான யுனிசெப் அமைப்பின் தலைவர் ஜாப் ஜக்காரியா கூறும்பொழுது, தாயாரிடம் இருந்து தாய்ப்பாலை பெறுவது குழந்தைகளின் உரிமை. அது அவர்களது வாழ்வு மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது என கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுப்பது என்பது குழந்தைகளின் உரிமையை மீறுவது ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களில் பெருமளவிலான தாயார்கள் நீர், பால் பொருட்கள் மற்றும் பிற உணவு அல்லது திரவங்களை கொடுத்து வருகின்றனர். இந்த நடைமுறை குழந்தைகளுக்கு நல்லதல்ல. அவர்களுக்கு பாதிப்பினையே அது ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்தில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தல் மற்றும் குழந்தை பிறந்து முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுத்தல் ஆகிய 2 முக்கிய விசயங்கள் குழந்தை மரணம், வியாதிகள் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவற்றை பெருமளவில் குறைக்கிறது என உலகளவில் நிரூபிக்கப்பட்டு உள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story