ஊழல் வழக்கில் பாக். நிதி மந்திரி மீது குற்றச்சாட்டு பதிவு


ஊழல் வழக்கில் பாக். நிதி மந்திரி மீது குற்றச்சாட்டு பதிவு
x
தினத்தந்தி 27 Sep 2017 11:31 PM GMT (Updated: 27 Sep 2017 11:31 PM GMT)

பாக். நிதி மந்திரி மீது இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் நிதி மந்திரியாக இருப்பவர் இஷாக் தார். இவர் ஊழல் புரிந்து வருமானத்துக்கு அதிகமாக ரூ.831.67 மில்லியன் அளவுக்கு சொத்து குவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அவர் மீது இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நேற்று அவர் நீதிபதி முகமது பஷீர் முன்னிலையில் ஆஜரானார். அப்போது அவரது வக்கீல் அஜ்மத் பெர்வேஸ், “குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக நோட்டீஸ் அளிக்கப்படுவது வழக்கம். இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் என் கட்சிக்காரருக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை” என்று கூறினார்.

ஆனால் அதை நீதிபதி நிராகரித்தார். முந்தைய விசாரணை நாளில் (செப்டம்பர் 19-ந் தேதி) அவர் ஆஜராகாததால், நோட்டீஸ் காலகட்டம் அனுமதிக்கப்பட்டதாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து இஷாக் தார் மீது முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்தார். அப்போது அவர், “இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை” என்று கூறினார்.

தேசிய பொறுப்புடைமை அமைப்பின் சார்பில் 28 சாட்சிகளைக் கொண்ட பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த விசாரணையின்போது 2 சாட்சிகளை ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்று இஷார் தார் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் 4-ந் தேதி நடைபெறும். முகரம் பண்டிகை முடிந்ததும், இந்த வழக்கில் தினந்தோறும் விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

Next Story