பனமா பேப்பர்ஸ் மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு


பனமா பேப்பர்ஸ் மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டு பதிவு  தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 13 Oct 2017 7:11 AM GMT (Updated: 13 Oct 2017 7:11 AM GMT)

பனமா பேப்பர்ஸ் மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இஸ்லமபாத்,

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, தீர்ப்பு அளித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை விரிவாக விசாரிக்கும்படி தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
அதன்படி நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான 3 ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் மீதான முதல்கட்ட விசாரணையின்போது கடந்த மாதம் 26-ந் தேதி நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜரானார். 

அப்போது ஊழல் வழக்குகள் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. நவாஸ் ஷெரீப்பின் வக்கீல் ஹவாஜா ஹரீஸ், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன், ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டுப்பட்டு உள்ள அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என கேட்டுக்கொண்டார். இருப்பினும், லண்டனில் சிகிச்சை பெறும் தனது மனைவியை காண நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து சென்றுவிட்டார். எனவே நவாஸ் ஷெரீப் இன்றைய வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை. 

இன்று நீதிமன்றம் கூடியதும், நீதிபதி அறையில் வழக்கறிஞர்கள் அமளியில் ஈடுபட்டனர். நீதிமன்றத்துக்கு வெளியே, வழக்கறிஞர்களை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நீதிபதி அறையைவிட்டு வெளியேறினார். குற்றச்சாட்டு பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்து விட்டார். நவாஸ் ஷெரீப் இன்று ஆஜராக போதிலும், அவரது மகள் மர்யம் ஷெரீப் மற்றும் மருமகன் சப்தார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி இருந்தனர். 

Next Story