விந்தணுக்கள் குறைவான ஆண்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் - ஆய்வு முடிவு


விந்தணுக்கள் குறைவான ஆண்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் - ஆய்வு முடிவு
x
தினத்தந்தி 20 March 2018 9:18 AM GMT (Updated: 20 March 2018 9:18 AM GMT)

விந்தணுக்கள் குறைவான ஆண்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வில் தெரியவந்து உள்ளது. #NewStudy


லண்டன், 

ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு என்பதன் பிரச்சனை மகப்பேறு பிரச்சனையுடன் மட்டும் நின்றுவிடுவது கிடையாது, அவர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
ஆய்வாளர்களின் தகவல்படி ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையானது அவர்களது பொது உடல்நலம் மற்றும் கருவுறுதல் மதிப்பீட்டின் குறியீடாக இருக்கிறது, இது அவர்களின் சுகாதார மதிப்பீடு மற்றும் நோய் தடுப்பு உள்ளிட்டவற்றை தெரிந்துக்கொள்ள தனிப்பட்ட வாய்ப்பையும் கொடுக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  
இத்தாலியில் குழந்தைபேறு இல்லாமல் இருக்கும் ஆண்களை பரிசோதித்ததில், குழந்தை பேறு என்பதையெல்லாம் கடந்து, உடல் நல பிரச்னைகளுக்கு விந்தணு முக்கிய காரணியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தாலியின் ப்ரெஸ்ஸியா பல்கலைக்கழகத்தின் மருத்துவர் அல்பர்டோ ஃபெர்லின் பேசுகையில், “ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவு என்பது வளர்சிதை மாற்றம், இதய நோய்கள் போன்றவற்றுடன் தொடர்பு உடையது என்பது எங்களுடைய ஆய்வில் தெரியவந்து உள்ளது,” என கூறிஉள்ளார். 
 
மலட்டுத்தன்மைக்காக சிகிச்சை கொடுக்கப்படும் ஆண்களுக்கு முறையான உடல் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்பதை ஆய்வு காட்டுகிறது.
 
குழந்தை பெற்று கொள்வதில் சிரமத்தை சந்திக்கும் ஆண்களுக்கு அதற்கான காரணம் குறித்து சரியாக கண்டறியப்பட வேண்டும். மேலும் கருத்தரித்தல் தொடர்பான விஷயத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் முதன்மை உடல் நல மருத்துவர்கள் பார்வையில் தொடர்ந்து சிகிச்சையில் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு நோய் வாய்ப்படும் வாய்ப்பும் இறக்கும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது என்று ஃபெர்லின கூறிஉள்ளார். 

சரியாக 5177 ஆண்களை சோதித்ததில், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் 20 சதவீத ஆண்கள் குண்டாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதல் கொழுப்பு, அதிகமான இரத்த அழுத்தம் மற்றும் அதிகமான கெட்டு கொழுப்பு இருக்கிறது என ஆய்வு முடிவு சொல்கிறது. உடல்நலன் தொடர்பான இந்த பிரச்னைகளில் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவாக இருப்பது முக்கிய தொடர்பு வகிக்கிறது. விந்தணுக்கள் குறைவான ஆண்கள் பிற மருத்துவ பிரச்சனைகளுக்கும் பரிசோதனையை செய்துக்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். 

சிகாகோவில் அறிவியலிலும், மருத்துவத்திலும் சமீபத்திய கண்டுபிடிப்பு தொடர்பாக நடைபெற உள்ள 100-வது மாநாட்டில் ஆய்வு அறிக்கை சர்பிக்கப்பட உள்ளது.

Next Story