பாரீசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை: பெல்ஜியம் கோர்ட்டு தீர்ப்பு


பாரீசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை: பெல்ஜியம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 April 2018 10:30 PM GMT (Updated: 23 April 2018 7:46 PM GMT)

பாரீசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெல்ஜியம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பிரசல்ஸ், 

2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பயங்கரவாதிகள் 7 இடங்களில் துப்பாக்கி சூடும், தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தினர். இதில் 130 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகளில் 8 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்.

எஞ்சிய ஒரே பயங்கரவாதியான அப்தே சலாமை (வயது 28) பிடிக்க பிரான்ஸ் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர் பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஒரு அடுக்குமாடி வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. 2016-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி அவனை பிடிக்க பிரசல்ஸ் போலீசார் சென்றபோது அப்தே சலாம் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினான். எனினும் போலீசார் அவனையும், அவனுடைய கூட்டாளி அயாரி (24) என்பவனையும் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர். பின்னர் அப்தே சலாம் பிரான்ஸ் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டான். இவர்கள் கைதான அடுத்த சில நாட்களில் பிரசல்ஸ் நகர விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கும் இவர்களது கூட்டாளிகளே காரணம் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அப்தே சலாம், அயாரி ஆகியோர் மீதான விசாரணை பிரசல்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது இருவரும் பயங்கரவாதிகள் என்பதில் சந்தேகமில்லை என்று கூறிய நீதிபதி மேரி பிரான்ஸ், இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.

Next Story