உலக செய்திகள்

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பயண கட்டுப்பாடுகள்: பாகிஸ்தான் அதிரடி + "||" + Pakistan introduces travel restrictions for US Embassy, Consulate staff

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பயண கட்டுப்பாடுகள்: பாகிஸ்தான் அதிரடி

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பயண கட்டுப்பாடுகள்: பாகிஸ்தான் அதிரடி
அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் விதித்து பாகிஸ்தான் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.
இஸ்லாமாபாத்,

உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான், தன் மண்ணில் செயல்பட்டு வருகிற பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்று அமெரிக்கா கருதுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவிகளை அமெரிக்கா நிறுத்தி வைத்து உள்ளது.

அது மட்டுமின்றி இரு நாடுகளுக்கு இடையே தற்போது இணக்கமான நல்லுறவு இல்லை.

இந்த நிலையில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலும், பிற நகரங்களிலும் உள்ள பாகிஸ்தான் துணை தூதரகங்களில் பணி ஆற்றுகிற தூதரக அதிகாரிகள், ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாட்டினை டிரம்ப் நிர்வாகம் கடந்த மாதம் அறிவித்தது.

இதன்படி, அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மற்றும் துணைத்தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் தாங்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ள நகர எல்லையில் இருந்து 25 மைல் பரப்புக்குள் இருக்க வேண்டும். அதைத்தாண்டி வெளியே போகக்கூடாது.

கடந்த 1-ந் தேதி முதல் இந்தப் பயணக்கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருந் தன. ஆனால் பின்னர் அமெரிக்கா இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை ஒத்திபோட்டது.

நேற்று முதல் இந்த கட்டுப்பாடுகள் அமெரிக்காவில் அமலுக்கு வந்து உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானும் இதே போன்ற கட்டுப்பாடுகளை தன் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.

அதில் அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள பயணக்கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறபோது, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் விதிக்கப்படுகிற கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என கூறப்பட்டு உள்ளது.

அந்த வகையில் பாகிஸ்தான் தூதரகத்தினருக்கு அமெரிக்கா விதித்த பயண கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தன. எனவே அமெரிக்க தூதரகத்தினருக்கு பாகிஸ்தான் விதித்து உள்ள கட்டுப்பாடுகளும் நேற்று அமலுக்கு வந்து உள்ளன.

ஏற்கனவே பாகிஸ்தானில் பணி அமர்த்தப்பட்டு இருக்கிற அமெரிக்க தூதரக, துணைத் தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் உயர் பாதுகாப்பு பகுதிகளுக்கும், பழங்குடியினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கும் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

இப்போது விதிக்கப்பட்டு உள்ள பயண கட்டுப்பாடுகள் வருமாறு:-

* அமெரிக்க தூதரகத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த ஏழு வசதிகள் திரும்பப் பெறப்படுகின்றன.

குறிப்பாக, அலுவலக ரீதியிலான வாகனங்களில் ராஜ்ய ரீதியில் அமையாத நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்துதல், குறிப்பிடப்படாத அல்லது வாடகைக்கு எடுக்கிற வாகனங்களில் ராஜ்யரீதியிலான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்துதல், விசா காலம் முடிந்தும் தங்க வழங்கப்பட்டு வந்த அனுமதி, ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தும் வசதி ஆகியவை திரும்பப்பெறப்பட்டு உள்ளன.

* அமெரிக்க தூதரகத்தினர் தங்கள் இல்லங்களிலும், வீடுகளிலும் ரேடியோ தகவல் பரிமாற்ற சாதனங்களை அமைக்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

* கட்டிடங்களை வாடகைக்கு அமர்த்தவும், ஒரு இடத்தில் இருந்து பிறிதொரு இடத்துக்கு சாதனங்களை எடுத்துச்செல்லவும் கூட தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

* பயோமெட்ரிக் முறையில் சரி பார்க் கப்படாத செல்போன் சிம் கார்டுகளை பயன்படுத்த அனுமதி கிடையாது.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் பாகிஸ்தான் விதித்து உள்ள இந்த கட்டுப்பாடுகள் உலக அரங்கில் அதிர்வுகளை ஏற் படுத்தி உள்ளன.