ஈராக் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: ஐ.எஸ். பயங்கரவாதிகளை வீழ்த்திய பின்னர் முதன்முதலாக நடந்தது


ஈராக் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: ஐ.எஸ். பயங்கரவாதிகளை வீழ்த்திய பின்னர் முதன்முதலாக நடந்தது
x
தினத்தந்தி 12 May 2018 10:30 PM GMT (Updated: 12 May 2018 7:54 PM GMT)

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை வீழ்த்திய பின்னர் முதன் முதலாக நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் ஹைதர் அல் அபாதி ஆட்சியை தக்க வைப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

பாக்தாத், 

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சியை அமெரிக்கா வீழ்த்திய பின்னர் ஷியா பெரும்பான்மையினர் ஆட்சி நடந்து வருகிறது. தற்போது அங்கு பிரதமராக ஹைதர் அல் அபாதி உள்ளார்.

அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை அமெரிக்காவின் துணையுடன் ஈராக் ராணுவம் வீழ்த்தியது. ஐ.எஸ் பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டதாக பிரதமர் ஹைதர் அல் அபாதி அறிவித்த பின்னர் முதன்முதலாக அங்கு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அந்த நாட்டின் 329 இடங் களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தேர்தலில் மொத்தம் 6 ஆயிரத்து 990 வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர். இவர்களில் 2,011 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். பெண்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று சிறுபான்மையினருக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இந்த தேர்தலில் 87 கட்சிகள் போட்டியிட்டாலும், ஷியா, சன்னி, குர்து இன கூட்டணி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஊழல், வறுமை, பாதுகாப்பு, ஈரான் ஏற்படுத்தி வருகிற தாக் கம், ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினரின் எதிர்காலம் ஆகியவை முக்கியமாக தாக்கத்தை ஏற்படுத்தின.

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 1 கோடியே 82 லட்சம் பேர் ஓட்டுரிமை பெற்று உள்ளனர்.

முதன்முறையாக மின்னணு ஓட்டு எந்திரங்கள் இந்த தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஓட்டுச்சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாக்தாத், மொசூல் மற்றும் பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தன.

பிரதமர் ஹைதர் அல் அபாதி தனது நாசிர் (வெற்றி) கூட்டணியின் ஆட்சியை தக்க வைப்பதற்காக போராடி வருகிறார். அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் நூரி அல் மாலிக்கியின் தவ்லத் அல் கனும், முன்னாள் மந்திரி ஹாதி அல் அமிரி தலைமையிலான பட்டா கூட்டணியும் ஆட்சியை பிடிப்பதற்காக வரிந்து கட்டி உள்ளன.

அவர்களையும் கடந்து இளைய தலைமுறையினரை கவர்வதில் அமர் அல் ஹக்கீம் தலைமையிலான ஹிக்மா கூட்டணி கவனம் செலுத்தி உள்ளது.

அதே நேரத்தில் 165 இடங்களைப் பிடித்து எந்த ஒரு அணியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என ஈராக்கில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தேர்தல் முடிந்து 48 மணி நேரத்தில் முடிவுகள் வெளியானாலும், அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடைமுறைகள் மாதக்கணக்கில் நீடிக்கும் என தெரிகிறது. இருப்பினும் அதுவரையில் தற்போதைய பிரதமர் ஹைதர் அல் அபாதி, அனைத்து அதிகாரங்களுடன் பதவியில் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story