இந்தோனேசியாவில் 2-வது நாளாக பயங்கரம் போலீஸ் தலைமையகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்


இந்தோனேசியாவில் 2-வது நாளாக பயங்கரம் போலீஸ் தலைமையகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்
x
தினத்தந்தி 14 May 2018 11:00 PM GMT (Updated: 14 May 2018 9:42 PM GMT)

இந்தோனேசியாவின் சுரபயா நகரில் நேற்றும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜகார்த்தா, 

இந்தோனேசியாவின் சுரபயா நகரில் நேற்றும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தற்கொலைப்படையினர் மோட்டார் சைக்கிளில் வந்து போலீஸ் தலைமையகம் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

17 ஆயிரம் தீவுகளைக் கொண்ட ஆசிய நாடான இந்தோனேசியா 2002-ம் ஆண்டில் இருந்து பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வருகிறது. அந்த ஆண்டு பாலித் தீவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 202 பேர் கொல்லப்பட்டனர்.

அண்மைக்காலமாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கிளையான ‘ஜாத்’ என்னும் அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்தோனேசியாவின் 2-வது மிகப்பெரிய நகரான சுரபயாவில் ஜாத் பயங்கரவாதிகள் 3 தேவாலயங்களில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, 9 மற்றும் 12 வயது கொண்ட 2 மகள்கள், 16 மற்றும் 18 வயதுடைய 2 மகன்கள் என மொத்தம் 6 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நேற்று சுரபயா நகரில் தற்கொலைப்படையினர் அங்குள்ள போலீஸ் தலைமையகத்தில் தாக்குதல் நடத்தினர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த தற்கொலைப்படையினர் போலீஸ் தலைமையகம் அருகே வந்தவுடன் தங்களது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இதில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி, 3 போலீசார் உள்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். அவர்களுடன் வந்த 8 வயது சிறுமி ஒருத்தி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். அவளையும், பலத்த காயம் அடைந்தவர்களையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இந்த தாக்குதல் குறித்து இந்தோனேசிய தலைமை போலீஸ் அதிகாரி டிட்டோ கார்நாவியன் கூறியதாவது:-

சுரபயா போலீஸ் தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்(கணவன், மனைவி, 2 மகன்கள், ஒரு மகள்) இரண்டு மோட்டார் சைக்கிள்களில் காலையில் அங்கு வந்தனர். ஒரு மோட்டார் சைக்கிளின் பின்புறம் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தார்.

அவர்கள் பாதுகாப்பு சோதனைச் சாவடி அருகே மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு கீழே இறங்கியபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது குண்டுகள் வெடித்துச் சிதறிய காட்சி பதிவாகி இருக்கிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ கண்டித்து உள்ளார். இது கோழைத்தனமான, கண்ணியமற்ற, மனிதாபிமானம் இல்லாத செயல். பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் எனது அரசாங்கம் எந்த சமாதானமும் செய்து கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்தோனேசியாவில், பயங்கரவாத அமைப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் முழுமையாக இணைந்து தற்கொலைப்படை தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Next Story