அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போது வேண்டுமானாலும் தயாராகவுள்ளோம்: வடகொரியா அறிவிப்பு


அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போது வேண்டுமானாலும் தயாராகவுள்ளோம்: வடகொரியா அறிவிப்பு
x
தினத்தந்தி 25 May 2018 1:35 AM GMT (Updated: 25 May 2018 1:35 AM GMT)

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போது வேண்டுமானாலும் தயாராகவுள்ளோம் என வடகொரியா வெளியுறவுதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது. #NorthKoreaOpenTalks

வடகொரியா,

வடகொரியா, பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்கிற வகையில் அணு ஆயுத சோதனைகளை கை விடுவதாகவும், அணு ஆயுத சோதனை தளத்தை அழிக்கப்போவதாகவும் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பு, உலக நாடுகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தனது நாட்டின் ஒரே அணு ஆயுத சோதனை தளமான புங்கியே-ரி அணு அணு ஆயுத சோதனை தளத்தை வடகொரியா வெடி வைத்து தகர்த்தது. அதில் உள்ள சுரங்கங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக தெரியவந்து உள்ளது.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். 
 
இந்நிலையில் அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, அமெரிக்காவின் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இதனையடுத்து அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே வார்த்தைப்போர் ஏற்பட்டது. உச்சத்தில் டொனால்டு டிரம்ப் உடனான சந்திப்பு முடிவில் இருந்து விலகுவோம் என வடகொரியா எச்சரிக்கையை விடுத்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு வேலைக்கு ஆகாது என்று வெளிப்படையாகவே டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார். மீண்டும் வார்த்தைப்போர் உச்சம் அடைந்தது.

இதனிடையே வடகொரியா அதிபர் கிம் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்து உள்ளார். 
  
 “வடகொரியாவின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் பெரிய அளவு பகைமையும், ஆவேசமும் நிறைந்ததாக இருந்தது. இதனால் நீண்ட நாளைய திட்டமான நம்முடைய சந்திப்பை இப்போது நடத்துவது சரியாகாது என்று கருதுகிறேன், இதற்காக நான் வருந்துகிறேன்” என்று டொனால்டு டிரம்ப் கூறிஉள்ளார். மேலும், இது இழந்த வாய்ப்புதான் ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் கிம்ஐ தான் சந்திப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய அரசு தயாராக உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம்  அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வடகொரிய வெளியுறவு துறை மந்திரி கிம் கை குவான் கூறுகையில், ”வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்கும் என்பதால், அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தோம். இந்நிலையில் கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை அதிபர் டிரம்ப் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளை தீர்க்க தயாராக இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்

Next Story