இஸ்ரேல் படை தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 4 பேர் பலி, 600 பேர் காயம்


இஸ்ரேல் படை தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 4 பேர் பலி, 600 பேர் காயம்
x
தினத்தந்தி 9 Jun 2018 2:46 AM GMT (Updated: 9 Jun 2018 2:46 AM GMT)

இஸ்ரேல் படை தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 4 பேர் பலியாயினர். மேலும் 600 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர். #

காஸா,

இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையான காஸாவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் 4 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதில் 120 பேருக்கு மேல், நெருப்பு மற்றும் கண்ணீர் புகையால் நேரடியாக பாதிக்கப்பட்டனர்.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அத்துடன் இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கி வந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்றவும் அவர் உத்தரவிட்டிருந்தார். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியத்திற்கும் இடையேயான காஸாமுனை எல்லைப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஸாவின் கிழக்கு எல்லைப் பகுதியில் நக்வா ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில் நடந்த பேரணியின் போது, பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது கற்களை வீசியும், எரியும் டயர்களை வீசியும், கையெறி குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனைத் தொடர்ந்து நிலையை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு இஸ்ரேலிய ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர்.

இதில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு, 600-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த மார்ச் 30-ந் தேதி அன்று, இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் 124 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு, 13,000 பேர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.



Next Story