ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 உறுப்பினர்கள் தேர்வு: 2 ஆண்டுகள் பதவி வகிப்பர்


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 உறுப்பினர்கள் தேர்வு: 2 ஆண்டுகள் பதவி வகிப்பர்
x
தினத்தந்தி 9 Jun 2018 11:30 PM GMT (Updated: 9 Jun 2018 7:42 PM GMT)

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. மேலும் தேர்வு செய்யப்பட்டவர்கள் 2 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பர் என்ற தகவலும் வெளிவாகியுள்ளது.

நியூயார்க், 

ஐ.நா. சபையின் அதிகாரமிக்க அமைப்பு, பாதுகாப்பு கவுன்சில் ஆகும். சர்வதேச அளவில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்து காப்பது, அதன் முக்கிய கடமை ஆகும். பொருளாதார தடைகளை விதிக்கிற அதிகாரமும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு உண்டு.

15 உறுப்பினர்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய 5 நாடுகள் மட்டும் நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும். பிற 10 இடங்கள், நிரந்தரம் இல்லா உறுப்பு நாடுகள் ஆகும். இந்த நாடுகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு இறுதியில் நெதர்லாந்து, சுவீடன், எத்தியோப்பியா, பொலிவியா, கஜகஸ்தான் ஆகிய 5 நாடுகளின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து புதிதாக 5 நிரந்தரம் இல்லா உறுப்புநாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஐ.நா. சபையில் நேற்று நடைபெற்றது.

இதில் இந்தோனேசியா, ஜெர்மனி, பெல்ஜியம், தென் ஆப்பிரிக்கா, டொமினிக் குடியரசு ஆகிய 5 நாடுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரம் இல்லா உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஐ.நா. பொதுச்சபையின் 193 உறுப்பு நாடுகளில் 190 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொண்டன.

ஜெர்மனி 184, டொமினிக் குடியரசு 184, தென் ஆப்பிரிக்கா 183, பெல்ஜியம் 181, இந்தோனேசியா 144 ஓட்டுகளை பெற்றன.

Next Story