உலக செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் மோடி கைகுலுக்கினார்: இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை + "||" + PM Modi, Pak President Mamnoon Hussain shake hands at SCO Summit

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் மோடி கைகுலுக்கினார்: இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் மோடி கைகுலுக்கினார்: இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியும், பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேனும் கைகுலுக்கி கொண்டனர். எனினும் இரு தலைவர்களுக்கு இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.
கிங்தாவோ, 

காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த 2016-ம் ஆண்டு கொடூர தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த நிகழ்வுகளால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த ஆண்டு இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதனால் அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை கைது செய்து, அவருக்கு மரண தண்டனை விதித்தது பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை இருநாட்டு உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷியா உள்ளிட்ட 8 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது உச்சி மாநாடு சீனாவின் கிங்தாவோ நகரில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் சீனா சென்றார். இந்த மாநாட்டில் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேனும் பங்கேற்றார்.

மாநாட்டின் போது சந்தித்துக்கொண்ட பிரதமர் மோடியும், பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேனும் பரஸ்பரம் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறினர். பின்னர் இருவரும் நீண்ட நேரம் உரையாடினர்.

இந்த மாநாட்டுக்கு இடையே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிற உறுப்பு நாடுகளுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். எனினும் பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் இறுதி அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

வளமிக்க மத்திய ஆசிய நாடுகளுடன் நட்புறவை அதிகரித்துக்கொள்ள இந்தியாவுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மகத்தான வாய்ப்பை வழங்கி இருக்கிறது. இந்த அமைப்புக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா விரும்புகிறது. இந்த மாநாடு வெற்றி பெறுவதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.

நிலம் மற்றும் டிஜிட்டல் இணைப்பு ரீதியாக புவியியல் வரையறையை மாற்றியமைக்கும் ஒரு கட்டத்தை நாம் மீண்டும் எட்டியிருக்கிறோம். எனவே அண்டை நாடுகள் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிராந்தியத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.

இணைப்பு என்பது வெறும் புவியியல் ரீதியான இணைப்பாக மட்டும் இருக்கக்கூடாது. மாறாக மக்களுக்கு இடையேயான பிணைப்பை உருவாக்குவதாக இருக்க வேண்டும். உள்ளடக்கிய, நிலையான மற்றும் வெளிப்படைத்தன்மை மிகுந்த எந்த திட்டத்தையும் இந்தியா வரவேற்கிறது. ஆனால் அது, உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு அளிப்பதாக இருக்க வேண்டும்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் வெறும் 6 சதவீதத்தினரே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். நமது பொதுவான கலாசாரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம், இந்த எண்ணிக்கையை இருமடங்காக்க முடியும். எனவே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உணவு திருவிழா மற்றும் ஒரு புத்தமத திருவிழாவை இந்தியாவில் நடத்துவோம்.

பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் வீரியத்துக்கு ஒரு துரதிர்ஷ்டவசமான எடுத்துக்காட்டாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது. அங்கு அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அதிபர் அஷ்ரப் கனி மேற்கொண்டிருக்கும் போர் நிறுத்த நடவடிக்கையை பாராட்டுகிறேன். இந்த துணிச்சலான நடவடிக்கையை அனைத்து பிரிவினரும் மதிப்பார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய சீன அதிபர் ஜின்பிங், உறுப்பு நாடுகளின் கூட்டு திட்டங்களுக்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு 4.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.30 ஆயிரம் கோடி) கடன் வழங்குவதாக அறிவித்தார். மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வருகையால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மேலும் வலுப்பெறும் என அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த அமைப்பின் உறுப்பு நாடாக கடந்த ஆண்டு இந்தியா இணைந்த நிலையில், அதன் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த மாநாட்டு நிகழ்வுகளுக்கு இடையே பிரதமர் மோடி கஜகஸ்தான் அதிபர் நுர்சுல்தான் நாசர்பேயேவ், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பாய் ஜீன்பெகோவ், மங்கோலிய அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். சீன அதிபர் ஜின்பிங்கை நேற்றுமுன்தினம் அவர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டை முடித்துக்கொண்டு நேற்று மாலையில் பிரதமர் மோடி சீனாவில் இருந்து தாயகம் திரும்பினார்.