உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை: என்ஜினீயர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மேற்படிப்பு படிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம் + "||" + Indian-origin student shot dead in US

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை: என்ஜினீயர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மேற்படிப்பு படிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை: என்ஜினீயர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு மேற்படிப்பு படிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்
என்ஜினீயர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மேற்படிப்பு படிக்க சென்ற இந்திய மாணவர், அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வாஷிங்டன், 

அமெரிக்காவின் மிசூரி மாகாணம் கன்சாஸ் நகரில் உள்ள மிசவுரி பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பு படித்து வந்தவர் சரத் கோப்பு (வயது 25).

இந்திய மாணவரான இவருடைய பூர்வீகம், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் ஆகும்.

இவர் மிசவுரி பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டே, கன்சாஸ் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் வெள்ளிக்கிழமை மாலை சக ஊழியர்களுடன் அந்த ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு நுழைந்த கொள்ளையன், சரத் கோப்புவிடம் துப்பாக்கியை காட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

ஆனால் பயந்துபோன சரத் கோப்பு, உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட்டலின் பின்புறவாயிலை நோக்கி ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த மர்ம கொள்ளையனோ அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சரத் கோப்புவின் முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அதைத் தொடர்ந்து அந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றான்.

அதன் பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சரத் கோப்புவை, அங்கு இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சரத் கோப்பு பரிதாபமாக இறந்தார்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவம் நடந்த ஓட்டலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் சரத் கோப்புவை சுட்டு வீழ்த்திய கொள்ளையனை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

அதே சமயம் சம்பவம் நடந்த ஓட்டலுக்குள் சந்தேகிக்கும்படி வாலிபர் ஒருவர் வந்து செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. போலீசார் அந்த வீடியோ பதிவை வெளியிட்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்.

மேலும் அந்த கொள்ளையன் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம்) சன்மானமாக வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர் சரத் கோப்பு, ஐதராபாத்தில் உள்ள கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக பணியாற்றி வந்தவர். கடந்த ஜனவரி மாதம்தான் அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பட்ட மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து வருவதற்கு நிதி திரட்டுவதற்காக அவருடைய நெருங்கிய உறவினரான ரகு சவுதாவரம் என்பவர் ‘கோ பண்ட் மீ’ என்ற பெயரில் ஒரு கணக்கு தொடங்கி உள்ளார். அந்த கணக்கு தொடங்கி 3 மணி நேரத்தில் 25 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.17 லட்சம்) திரண்டது.

சரத் கோப்புவுக்கு அவர் படித்து வந்த மிசவுரி பல்கலைக்கழகம் இரங்கல் தெரிவித்து உள்ளது.

சரத் கோப்பு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அவர் உறுதி அளித்து உள்ளார்.

இதேபோன்று சிகாகோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகமும், சரத் கோப்பு கொலையில் அனைத்து உதவிகளும் செய்யப்படும், தூதரக அதிகாரிகள் கன்சாஸ் நகருக்கு விரைகின்றனர் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.