மீட்பு படையினருக்கு வழிகாட்டிய குகையில் சிக்கிய அகதி சிறுவன் தாய்லாந்து ஹீரோவானான்


மீட்பு படையினருக்கு வழிகாட்டிய குகையில் சிக்கிய அகதி சிறுவன் தாய்லாந்து ஹீரோவானான்
x
தினத்தந்தி 12 July 2018 7:38 AM GMT (Updated: 12 July 2018 7:38 AM GMT)

குகையில் சிக்கி இருந்த சிறுவர்களில் 5 மொழி தெரிந்த சிறுவன் மீட்பு படையினருக்கு வழிகாட்டி உள்ளான் அவனை தாய்லாந்து ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். #ThaiCaveRescue #Thamluangcave #Thailandcave


தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர். 

இந்தப் பணியின்போது, குகைக்குள் சிக்கிய ஒரு சிறுவன் மீட்பு படையினருக்கு மிகவும் உதவியதாக, தாய்லாந்து கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சிறுவன் சிரிப்பது போன்ற புகைப்படத்தை தாய்லாந்து கடற்படையினர் வெளியிட்டு, ' குகையினுள் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், இந்தச் சிறுவன் புன்னகையுடன் எங்களுக்கு மிகவும் உதவினான்' எனப் பதிவிட்டுள்ளனர்.

மியான்மரை பிறப்பிடமாக கொண்ட அதுல் சாம் என்ற இந்த சிறுவனின் வயது 14. இந்தச் சிறுவன் ஆங்கிலம், தாய், புர்மீஸ், மாண்டரின், மற்றும் வா ஆகிய ஐந்து மொழிகளை நன்கு அறிந்துவைத்துள்ளான். ஆங்கிலத்திலேயே மீட்புக் குழுவினருக்குத் தங்கள் நிலையை பற்றி எடுத்துக்கூறி மீட்புக்குழுவினருக்கு உதவி செய்த இச்சிறுவனது புகைப்படத்தை தாய்லாந்து கடற்படை வீரர்கள் வெளியிட்டதையடுத்து இச்சிறுவனின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கல்வியறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது பெற்றோரை விட்டு பிரிந்து தாய்லாந்தில் வசித்து வருகிறான், ஆனால், இச்சிறுவனுக்கு இன்றுவரை பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. ஐ.நா. அகதிகள் முகமை (UNHCR) படி, தாய்லாந்து நாட்டில் அதுல் சாம் உட்பட 400,000 க்கும் அதிகமானோர் தங்களுக்கு வசிப்பதற்கு தாய்லாந்தில் மாநிலம் இல்லை என பதிவு செய்துள்ளனர். பிறப்புசான்றிதழ், அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் கூட இல்லாத அகதி சிறுவனாக இருக்கும் அதுல், தாய்லாந்தில் சட்டப்பூர்வமாக எந்த ஒரு விஷயத்தையும் செய்வதும் இயலாது ஒன்று.

Next Story