ஏலத்தில் விற்கப்பட்ட ‘கொலை எந்திரம்’!


ஏலத்தில் விற்கப்பட்ட ‘கொலை எந்திரம்’!
x
தினத்தந்தி 21 July 2018 10:46 AM GMT (Updated: 21 July 2018 10:46 AM GMT)

பிரான்சின் புகழ்பெற்ற புராதன பொருட்கள் ஏலம் விடப்படும் இடமான டராவுட் ஓட்டல், தலை துண்டித்துக் கொல்லப் பயன்படுத்தப்படும் கில்லெட்டின் எந்திரம் ஒன்றை ஏலம் விட்டது.

10 அடி உயரமுள்ள கில்லெட்டின் எந்திரம், பிரான்ஸ் கோடீஸ்வரர் ஒருவரால் ரூ. 6.41 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

பிரெஞ்சுப் புரட்சி காலத்தில் கில்லெட்டின் எந்திரங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் பிரான்ஸ் நாட்டில் 1981-ம் ஆண்டு மரண தண்டனை ஒழிக்கப்பட்டபிறகு, கில்லெட்டின்களின் விற்பனை மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தது. இந்நிலையில், பிரான்சில் ஏலம் விடப்படுவதைக் கண்காணிக்கும் அமைப்பு ஒன்று கில்ெலட்டின் ஏலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

ஆனால் ஏலத்தைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் அந்த அமைப்புக்கு இல்லை. காரணம் அந்த கில்லெட்டினை வைத்திருந்த ஒரு பாரீஸ் ஜாஸ் கிளப், நஷ்டமடைந்ததால்தான் அதை ஏலத்தில் விட முடிவு செய்தது.

19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த கில்லெட்டின் ஏலம் விடப்பட்ட இரண்டே நிமிடங்களில் அதை கிறிஸ்டோப் பெவ்ரியர் என்ற பிரான்ஸ் தொழிலதிபர் வாங்கிவிட்டார்.

இந்த கில்லெட்டின் என்று அழைக்கப்படும் தலை வெட்டும் எந்திரங்கள், 1793-க்கும் 1794-க்கும் இடையே பிரெஞ்சு புரட்சிக்குப்பின் 16 ஆயிரம் பேரின் தலைகளை வெட்டப் பயன்பட்டது, பிரான்சின் ரத்தக் கறை படிந்த வரலாறு.

பிரான்சில் கடைசியாக கில்லெட்டினால் கொல்லப்பட்ட நபர், துனிசியாவைச் சேர்ந்த ஹமிடா ஜான்டோபி என்பவர்.

ஓர் இளம்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக 1977-ம் ஆண்டு அவரது தலை வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், தற்போது ஏலத்தில் விடப்பட்ட கில்லெட்டின், நிஜ கில்லெட்டின் எந்திரத்தின் ஒரு மாதிரிதான் என்றும், அது யாருடைய தலையையும் வெட்டப் பயன்படுத்தப்படவில்லை என்றும் டராவுட் ஓட்டல் தெரிவித்திருக்கிறது. 

Next Story