விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கு: லண்டன் நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை


விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கு: லண்டன் நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை
x
தினத்தந்தி 31 July 2018 5:54 AM GMT (Updated: 31 July 2018 5:54 AM GMT)

விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை நடைபெறுகிறது. #VijayMallyaCase #MallyaExtradition

லண்டன்,

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையா, கடந்த ஆண்டு மார்ச் 2–ந்தேதி இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு இங்கிலாந்தை கேட்டுக்கொண்டது. 

இந்தியா அளித்த புகாரின் பேரில் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இந்த ஆண்டு தொடக்கத்தில் மல்லையாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்தக்கோரும் வழக்கு லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த நீதிமன்றத்தில் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அரசியல் ரீதியாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பதாகவும், விஜய் மல்லையா அப்பாவி என்றும் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். ஜூலை 2-ம் வாரத்தில் இந்த வழக்கில் முக்கிய வாதம் மீண்டும் தொடங்கும் என கருதப்பட்டது. எனினும் தொடர்ந்து தாமதம் ஏற்பட்ட நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணையை தொடங்குகிறது.

இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில் வழக்கில் நீதிமன்றம் விசாரணையை தொடங்கவுள்ளது. நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி இருதரப்பு வாதங்களையும் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் வாதம் நடைபெறுகிறது. 

Next Story