உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 4 Aug 2018 9:06 PM GMT (Updated: 4 Aug 2018 9:06 PM GMT)

* காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறியிருந்தது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர், மனித உரிமை ஆணையம் வெளியிட்ட அறிக்கை குறித்து அதன் தலைவர் மட்டுமே பேச வேண்டும் எனக்கூறினார்.

* மெக்சிகோவில் தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வரும் நகரங்களில் ஒன்றான சியுடாட் ஜுவாரசில், 3 பெண்கள் உள்பட 11 பேர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு ஒரு வீட்டில் பிணமாக கிடந்தனர். நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஒப்ராடர், வருகிற 7-ந்தேதி அங்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5,207 பொருட்களுக்கு கூடுதல் வரி அறிவிப்பை சீனா மீண்டும் வெளியிட்டு உள்ளது. இந்த பொருட்களுக்கு 5 முதல் 25 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிப்பதாக கூறியுள்ள சீனா, இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் நியாயமானது எனவும், அமெரிக்காவின் மிரட்டலை ஒருபோதும் ஏற்கமாட்டோம் எனவும் அறிவித்து உள்ளது.

* அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் காட்டுத்தீ பரவி வருகிறது. நேற்று முன்தின நிலவரப்படி 1,57,450 ஏக்கர் பரப்பளவில் பரவி இருக்கும் காட்டுத்தீயால், 16 ஆயிரம் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் கடுமையான அனல் காற்றும் வீசுவதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

* ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எமர்சன் மனன்கக்வா, தனது வெற்றியை நாட்டின் புதிய தொடக்கம் என புகழ்ந்துள்ளார். நாட்டில் சுதந்திரமான, நேர்மையான மற்றும் நம்பகமான தேர்தல் நடந்திருப்பதை உலகுக்கு காட்டியுள்ளதாக கூறிய அவர், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

Next Story