ரஷிய வக்கீலை எனது மகன் சந்தித்தது உண்மைதான் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல்


ரஷிய வக்கீலை எனது மகன் சந்தித்தது உண்மைதான் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல்
x
தினத்தந்தி 6 Aug 2018 11:15 PM GMT (Updated: 6 Aug 2018 9:23 PM GMT)

2016-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்காக ரஷிய வக்கீலை எனது மகன் சந்தித்தது உண்மைதான் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் பற்றிய தகவல்களை பெற எனது மகன் ரஷிய வக்கீலை சந்தித்து பேசியது உண்மைதான் என்று டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். இதில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் பலம் வாய்ந்த வேட்பாளராக திகழ்ந்த ஹிலாரி கிளிண்டனை வீழ்த்த டிரம்பின் மகன் ஜான், ரஷியர்களின் உதவியை நாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சந்திப்பின்போது ரஷிய அதிபர் மாளிகையான கிரம்ளினை சேர்ந்த வக்கீல் ஒருவரும் உடன் இருந்ததாக கூறப்பட்டது. இந்த சந்திப்பு 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவர் கட்டிடத்தில் நடந்தது. இது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியது. இதை அப்போது டிரம்ப் மறுத்தார். எனது மகன் ரஷிய நாட்டு குழந்தைகளை தத்து எடுப்பது தொடர்பாகத்தான் ரஷியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றார்.

ஆனால் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும், சி.என்.என். டெலிவிஷனும் இந்த சந்திப்பு முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கொண்டது, குறிப்பாக அமெரிக்க தேர்தல் தொடர்புடையதுதான் என்று அண்மையில் செய்தி வெளியிட்டன. தனது மகன் ஜான், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவே 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் ரஷியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதை இப்போது டிரம்பும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நியூயார்க் நகரின் டிரம்ப் டவரில் ரஷியர்களுடன் இந்த சந்திப்பு நடந்தது. இதில் ரஷிய வக்கீல் ஒருவரும் இருந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காகவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது முற்றிலும் சட்ட ரீதியான சந்திப்புதான். இதுபோன்ற சந்திப்புகள் அமெரிக்க அரசியலில் எல்லா காலங்களிலும் நடந்துள்ளது. எனது மகனின் இந்த சந்திப்பு குறித்து எனக்கு முன்கூட்டியே தெரியும் என்று சொல்வது தவறு. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

டிரம்பின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story