இந்தோனேசியாவின் லம்போக் தீவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி


இந்தோனேசியாவின் லம்போக் தீவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி
x
தினத்தந்தி 20 Aug 2018 1:22 AM GMT (Updated: 20 Aug 2018 1:22 AM GMT)

இந்தோனேசியாவின் லம்போக் தீவில் 6.9 என்ற ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்தனர். #IndonesiaEarthquake

லம்போக்,

இந்தோனேசியாவின் சுற்றுலா தீவான லம்போக்கில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ரிஞ்சானி மலைப்பகுதி அருகே மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், 6.3 என ரிக்டர் அளவில் பதிவானது. கிழக்கு லம்போக்கின் தென்மேற்கு பகுதியிலுள்ள பெலான்டிங் டவுனை மையமாக கொண்டு சுமார் 7 கி.மீ. மையத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் கூறியது. நிலநடுக்கத்தை தொடர்ந்து, வீடுகளிலிருந்த மக்கள் அலறியடித்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். எனினும், இந்த நிலநடுக்கத்தால் அதிக சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் லம்போக் தீவில் மாலையில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்தன. காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து 12 மணி நேரம் கழித்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கத்தால், லம்போக் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட தடவை நில அதிர்வு உணரப்பட்டது என அமெரிக்க புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தேசிய பேரழிவு அமைப்பின் செய்திதொடர்பாளர் சுடொபோ புர்வோ நுக்ரோஹோ கூறுகையில், ”நேற்று மாலை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து போயின. கட்டிடங்களில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். அதில் ஒருவர் கிழக்கு லம்போக் பகுதியைச் சேர்ந்தவர். மற்றொருவர், லம்போக் அருகே அமைந்திருக்கும் சும்பாவா தீவைச் சேர்ந்தவர்” எனக் கூறினார்.

இந்தோனேசியாவில் கடந்த ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 350000 க்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story