ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 2 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் உயிரிழப்பு


ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 2 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 6 Sep 2018 12:19 PM GMT (Updated: 6 Sep 2018 12:19 PM GMT)

ஆப்கானிஸ்தானில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 2 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.

காபூல், 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மல்யுத்த பயிற்சி மையத்தில் நுழைந்த பயங்கரவாதி தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். பயிற்சி மையத்துக்குள் இருந்த அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடினர். இருப்பினும் குண்டுவெடிப்பில் பலரும் சிக்கினர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். குண்டுவெடிப்பு பற்றி செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்களும் அங்கு குவிந்தனர். 

முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்துகொண்டிருந்தபோது பயிற்சி மையத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த கோர சம்பவங்களில் 2 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். 4 பத்திரிகையாளர்கள் உள்பட 70 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த இரட்டை குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.


Next Story