ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பாதுகாப்பு படை வீரர்கள் பலி


ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பாதுகாப்பு படை வீரர்கள் பலி
x
தினத்தந்தி 10 Sep 2018 8:11 AM GMT (Updated: 10 Sep 2018 8:11 AM GMT)

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 7 தலீபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். #TalibanAttack

காபூல்,

ஆப்கானிஸ்தானின் நாட்டின் வடக்கு பகுதியில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஷ்டீ ஆர்சி மாவட்டத்திலுள்ள குண்டூஸ் மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 13 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 15 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்தனர் என மாகாணசபை தலைவர் முகமத் யூசஃப் ஆயுபி கூறியுள்ளார். 

அதேபோல், காம்யாப் மாவட்டத்திலுள்ள ஷாவ்ஷ்ஜான் மாகாணத்தில் இன்று காலை நடைபெற்ற சண்டையில் 8 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டதாக மாகாணத்தின் முதன்மை போலீஸ் அதிகாரி ஜெனரல் ஃபாகிர் தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மாவட்டத்தின் தலைநகர் பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாதிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தீவிரமாக சண்டையிட்டோம். இதில் 3 வீரர்கள் படுகாயமடைந்தனர். 7 தலீபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் எனக் கூறினார். இவ்விரு தாக்குதலுக்கு தலீபான் பொறுப்பேற்பதாக அதன் செய்தி தொடர்பாளார் ஷபிஹுல்லாஹ் முஜாஹித் தெரிவித்தார்.

இதனிடையே நேற்று ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், சோவியத் அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய மறைந்த தலைவர் மசூத்தின் ஆண்டு தினத்தினை முன்னிட்டு பேரணி ஒன்று நடந்தது.  அந்த பேரணியில் துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன் சென்ற பாதுகாப்பு வாகனம் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான். இதில் அருகில் இருந்த கட்டிடங்கள் குலுங்கின. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தன.  இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகினர்.  25 பேர் காயமடைந்தனர். 

Next Story