சீனாவில் ‘மங்குட்’ புயலுக்கு 4 பேர் பலி


சீனாவில் ‘மங்குட்’ புயலுக்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 17 Sep 2018 7:43 AM GMT (Updated: 17 Sep 2018 7:43 AM GMT)

பிலிப்பைன்ஸ் நாட்டை தொடந்து சீனாவை புரட்டி போட்ட ‘மங்குட்’ புயலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். #MangkhutTyphoon

பீஜிங்,

நடப்பு ஆண்டின் வலுவான புயல் என்று சொல்லப்படுகிற ‘மங்குட்’ புயல், பிலிப்பைன்ஸ் நாட்டின் லுசான் தீவை முற்றிலுமாய் புரட்டி போட்டு விட்டது.
இந்தப் புயலாலும், மழையாலும், நிலச்சரிவாலும் நேரிட்ட சம்பவங்களில் 65 பேர் உயிரிழந்து உள்ளனர். சுமார் 43 பேர் காணாமல் போய் உள்ளனர்.

விவசாய பயிர்கள் பெருமளவு சேதம் அடைந்து உள்ளன. நிறைய சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. தகவல் தொடர்பு வசதிகள் முடங்கின. மின்வினியோகம் தடைப்பட்டு உள்ளது. கட்டிடங்கள் பெரும் சேதம் அடைந்து இருக்கின்றன. ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் இந்தப் புயலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

லுசான் தீவை உருக்குலைய வைத்து விட்டு, இந்தப் புயல் சீனாவை நோக்கி நேற்று விரைந்தது. மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. புயலால் ஹாங்காங்கில் பலத்த மழை பெய்தது. புயலால் சீனாவில் சுமார் 3.11 மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 640 சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன.

சீனாவின் குவாங்ஸி பிராந்தியத்தில் புயலால் மரம் விழுந்து 3 பேர் பலியாகினர். மேலும் டாங்குவான் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றிருக்கும் பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் மரணம் அடைந்தார். மேலும் பல இடங்களில் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

Next Story