உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 23 Sep 2018 11:00 PM GMT (Updated: 23 Sep 2018 7:37 PM GMT)

* தான்சானியா படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. மேலும் விபத்துக்குள்ளான படகின் சிதைவுகளில் இருந்து ஆண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

* அமெரிக்காவின் குவாம் பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இதனால் பாதிப்புகள் உண்டா என்பது உடனடியாக தெரியவரவில்லை.

* சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 80 டாலருக்கு (சுமார் ரூ.5,600) விற்பனை ஆகிறது. கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலையில் நான் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சவுதி அரேபிய எரிசக்தித்துறை மந்திரி காலித் அர் பாலிஹ் கூறினார்.

* இந்தியாவுடன் ராஜ்ய ரீதியில் பாகிஸ்தான் தோல்வி கண்டிருப்பதற்கு இம்ரான்கான் அரசின் அவசரத்தன்மையே காரணம் என எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி குறை கூறி உள்ளன. இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்ததற்கு முன்பாக அதற்கான முன் ஏற்பாடுகளை இம்ரான்கான் அரசு செய்திருக்க வேண்டும் என்று அவை கருத்து தெரிவித்துள்ளன.

* சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாமை சேர்ந்த அன்வர் மியா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பர்மிங்ஹாமில் மருந்தாளராக (பார்மசிஸ்ட்) பணியாற்றி வந்தவர் என தகவல்கள் கூறுகின்றன.

Next Story