இஸ்ரேல் விமானம், இஸ்லாமாபாத்தில் தரை இறங்கியதா? - பாகிஸ்தான் மறுப்பு


இஸ்ரேல் விமானம், இஸ்லாமாபாத்தில் தரை இறங்கியதா? - பாகிஸ்தான் மறுப்பு
x
தினத்தந்தி 28 Oct 2018 10:00 PM GMT (Updated: 28 Oct 2018 7:49 PM GMT)

இஸ்ரேல் விமானம், இஸ்லாமாபாத்தில் தரை இறங்கியது குறித்த கேள்விக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவு இல்லை. இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் இருந்து தனியார் விமானம் ஒன்று, கடந்த 25-ந் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வந்து தரை இறங்கியது; அங்கு 10 மணி நேரம் தங்கி இருந்து விட்டு மீண்டும் டெல் அவிவ் புறப்பட்டு சென்றது என்று இஸ்ரேல் பத்திரிகையாளர் அவி சார்ப், டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். இது பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு மீது பலரும் சமூக வலைத்தளங்களில் சாடினர். இஸ்ரேல் விமானம் ரகசியமாக வந்து சென்றதின் பின்னணி என்ன என எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பி, அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தின.

ஆனால் இஸ்ரேல் விமானம், இஸ்லாமாபாத்தில் வந்து தரை இறங்கியது என்ற தகவல் அடிப்படை ஆதாரமற்றது என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூது குரேஷி கூறும்போது, “இஸ்ரேல் விமானம் இஸ்லாமாபாத்தில் தரை இறங்கியதாக கூறுவது பொய்யான தகவல்” என்றார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, “இஸ்ரேலுடன் பாகிஸ்தான் எந்தவிதமான உறவும் வைத்துக் கொண்டிருக்கவில்லை” என்று கூறி உள்ளார்.

பாகிஸ்தான் தகவல் துறை மந்திரி பவத் சவுத்ரி கருத்து தெரிவித்தபோது, “ இஸ்ரேலுடனோ, இந்தியாவுடனோ அரசானது ரகசிய பேச்சு வார்த்தை நடத்தாது” என குறிப்பிட்டார்.

Next Story